பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

December 21, 2014

திருமதி.மனோரஞ்சிதம் டர்பிடோ அவர்களுக்கு வீரவணக்கம்



எங்கள் மயிலாடுதுறையில் திமுகவை வளர்த்தவர்கள் என சொன்னால் அதில் முக்கிய பங்கு M.B.ராதாகிருஷ்ணன் என்னும் ராதாமாமாவுக்கு உண்டு. இதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. அவர் ஒரு தொழுநோயாளி. இருப்பினும் காலை 5.30க்கு தன் வீட்டில் இருந்து திமுக கொடி கட்டிய சைக்கிளில் தன் கட்சிப்பணியை தொடங்கினால் இரவு தூங்கும் வரை கட்சிப்பணி தான். அவர் என்னை " டர்பிடோ"ன்னு கூப்பிடுவார். எனக்கு அந்த பட்ட பெயரில் உடன்பாடு இருக்காது எனினும் அவரை ஒன்னும் சொல்லவும் முடியாது. ஒரு நாள் கேட்டேன் அவரிடம். "மாமா டர்பிடோன்னா என்னா? அதுக்கு அவரு சொன்னாரு. "எலேய் தம்பி, இந்த ஆசாரி எல்லாம் வச்சிருப்பாங்களே தொரப்பனம், மரத்தை ஓட்டை போட ... {இந்த இடத்தில் நான் தொரப்பனம் பத்தி சொல்லிடுறேன். ரொம்ப சிம்பிள்... இப்போ நாம் பார்க்கிறோமே Drill Machine அதான் தொரப்பனம். அது அப்போ மேன்லியா இருந்த போது மிஷின் இல்லாத போது அந்த ட்ரில் பிட்டை  அந்த கருவியின் முனையில் வச்சி  அந்த கருவியின் நடுவே கயிறு சுத்தி இரண்டு பக்கமும் இரண்டு பேர் முன்னும் பின்னும் இழுத்தால் அந்த ட்ரில் பிட் சுத்தி சுத்தி ஓட்டை விழும். அது தான் இப்போ அழிந்து போய் ட்ரில் மிஷின் முனையில் ட்ரில் பிட் வச்சு புழக்கத்தில் இருக்கு.. இப்போ ராதாமாமா சொல்வதை கேட்போம்} அந்த தொரப்பனம் மாதிரியே இங்கிலீஸ்காரன் மிலிட்டரில ஒரு மிசினு இருக்கும். அதுக்கு மொனையிலே ஓட்டை போட அந்த இரும்பிலே செஞ்ச குண்டு இருக்கும்(drill bit). இந்த போர்க்கப்பல் வருதுல்ல அதுக்கு பக்க வாட்டிலே போய் இந்த மிசின வச்சி இங்கிலீஸ்காரன் சுட்டா சும்மா சாட்டைல இருந்து பம்பரம் போவுமே அப்புடி அந்த குண்டு பாய்ஞ்சு போய் கப்பல் வவுத்துல குத்தும். குத்திட்டி நிக்காது. சுத்தும். அப்புடி சுத்தும் போது அது மரம் தானே... அதுல ஓட்டை வுழுந்துடும். அது வழியே தண்ணி பூந்து கப்பல் கவுந்துடும். அந்த துப்பாக்கிக்கு பேர் தான் டர்பிடோ. அந்த மாதிரி ஒருத்தர் நம்ம கட்சில இருக்காரு. அவரு பேரு ஏ.பி.ஜனார்தன நாயுடு. இந்த ஆளு பேசினா மேடையிலே பேசினா அந்த வார்த்தை எதிரியை துளைத்து அவன் இதயத்தை ஓட்டை போட்டு ஆளை அடிச்சிடும். அத்தனை கூர்மையாக சுத்தும் வார்த்தைகள் அது. இதுகாண்டியே அவரை எல்லாரும் டர்பிடோன்னு கூப்பிட ஆரம்பிச்சாங்க. அவரு பெரியாருக்கு ரொம்ப வேண்டப்பட்டவரு. அண்ணாவுக்கு பிரண்டு. பூர்வீகம் தெலுங்கு. அப்போ சென்னை ராஜதானியா இருந்தப்ப திராவிட நாடு எல்லாம் சேர்ந்து தான் சென்னை மாகாணம். பின்ன இவரு வேலூருக்கு வந்து படிச்சாரு. பின்ன சென்னைல படிச்சாரு. தெலுங்குல மேடைல பேசுவாரு. இங்கிலீசுல பேசுவாரு. பின்னால கலைஞர் விடுதலைல ஈரோட்டிலே வேலை செஞ்சப்ப ஈரோட்டிலே இவரு ஆங்கில பத்திரிக்கை ஜஸ்டிசைட்ல வேலை செஞ்சாரு.

அந்த ஆளு மாரியே நீ படார் படார்ன்னு பேசிடுற ... கேக்குறவன் நெஞ்சை துளைக்கிற மாரி ஆகுது. அதனாலத்தான் ஒன்ன டர்பிடோன்னு சொல்றேன்"ன்னு பெரிய விளக்கம் கொடுத்தார். அது முதல் எனக்கு டர்பிடோ ஏ.பி.ஜனார்தனம் மீது ஒரு ஈடுபாடே வந்து விட்டது. உடனே நான் என்னை டர்பிடோ அளவுக்கு என்னை உயர்த்திகிறேன் என இதை படிப்பவர்கள் என்னைப்பற்றி தவறாக நினைக்கக்கூடாது. இது ராதா மாமாவின் பழக்கம். ஒவ்வொறுவரையும் அவர் இப்படி நீதிக்கட்சி தலைவர்கள் பெயரால் அழைப்பது வழக்கம். {எப்படியெல்லாம் கட்சியை வளர்த்து இருக்காங்க பாருங்க} ஒருத்தனை பார்த்து "வாய்யா ரவு ஸ்வெடசல்லபதி ராமகிருஷ்ண ரங்காராவ்"ன்னு அழைப்பார். ஒருத்தனை பார்த்து "யோவ் டி.எம்.நாயரே"ன்னு கூப்பிடுவார். இந்த "ரவு ஸ்வெடசல்லபதி ராமகிருஷ்ண ரங்காராவ்" பெயர் மாத்திரம் எங்களுக்கு மனப்பாடம் செய்ய ரொம்ப கஷ்டமா இருக்கும். அதை பார்த்து ராதாமாமா "பசங்கலா வாயில வரலைன்னா பொப்பிலி அரசர்"ன்னு சொல்லிடுங்க என்பார். அதான் நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவரான  பொப்பிலி அரசரின் உண்மையான பெயர்  என்பதே எங்களுக்கு அப்போது தான் தெரியும். (அப்போது எங்கள் வயது 12 முதல் 15 வரை தான் இருந்த கால கட்டம்) சரி...கம் டு தி பாயிண்ட்...

இப்படியாக அடியேனுக்கு டர்பிடோ மீது இனம் புரியாத காதல் வந்ததது. நான் 1983 முதல் 1986 வரை டிகிரி முடித்த பின்னர் சென்னைக்கு வேலைக்கு சென்ற போது 1987ல் ஒரு நாள் பேப்பரில் டர்பிடோ ஏ.பி.ஜனார்தனம் மறைவு என முரசொலியில் தலைவர் கலைஞர், பேராசிரியர் எல்லாம் இரங்கல் தெரிவிச்சு இருந்தாங்க. அதே போல நாவலர் நெடுஞ்செழியன் அப்போது நிதிஅமைச்சர் ஆக இருந்தார். எம் ஜி ஆர் ஆட்சி காலம். அவரும் மக்கள் குரல் பத்திரிக்கைல பெரிசா இரங்கல் செய்தி கொடுத்தார். 13 வயதில் ராதா மாமா ஊட்டிய அந்த டர்பிடோ காதல் மீண்டும் துளிர்க்க அவர் இறந்தமைக்கு போக வேண்டும் என நினைத்தேன். அப்போது போக முடியவில்லை. ஆனால் அதன் பின்னர் சில நாள் கழித்து நானும் ஜானப்பா என்ற (இப்போது துபாயில் இருக்கிறார்) என் முதலாளி மகனும் ஒரு சில்வர் பிளஸ் வண்டி எடுத்து கிட்டு அவங்க வீட்டை கண்டு பிடிச்சு போனோம்.

அங்கே அவர் மனைவி மனோரஞ்சிதம் இருந்தாங்க. அவங்களுக்கு ஒரு மகள். டாக்டர்ன்னு சொன்னாங்க. எனக்கு அப்போ வயசு 21 இருக்கும். அவங்க சின்ன பசங்க ஆர்வமா வந்திருக்காங்கனு உட்கார வச்சி பேசினாங்க. டர்பிடோ பத்தி நிறைய பேசினாங்க. என் பெயர் கேட்டாங்க. தொல்காப்பியன் என சொன்னேன். சுத்தமான தமிழ் பெயர்ன்னு பாராட்டினாங்க.
"தம்பி என் பெயர் என்ன தெரியுமா? மனோரஞ்சிதம்"ன்னு சொன்னாங்க. நான் தெரியும் என சொன்னேன். உடனே " என் வீட்டு பெயர் எல்லாம் தெரியுமா? என் தங்கைகள் பெயர் சிலப்பதிகாரம், மணிமேகலை. அது போல என் தம்பிகள் பெயர் சாந்தகுணாளன், தசகிரீவன். இந்த சாந்தகுணாளன் யார் தெரியுமா? அதாவது அந்த புராண காலத்திலேயே "கடவுள் இல்லை"ன்னு சொன்ன கேரக்டர். எங்களுக்கு எல்லாம் முன்னோடி. இரணியன் தான் சாந்த குணாளன். அது மாதிரி இந்த தசக்கிரீவன் யார் தெரியுமா? இராவணன் - திராவிடன்"ன்னு சொன்ன போது ஆச்சர்யமாக இருந்தது. மேலும் சொன்னாங்க....
"நாங்க பேரி செட்டியார்ன்னு சாதியாம். அதனால அந்த காலத்திலே பேரிசெட்டியார் சமூகத்திலே நீதிபதியா இருந்த எஸ்.ஏ.அய்யாசாமி செட்டியாரின் பையனுக்கு என்னை பொண்ணு கேட்டு வந்தாங்க. ஆனா எங்கப்பா கேளம்பாக்கம் பொன்னுசாமி ஒரு பெரியார் தொண்டராச்சா. அதல்லாம் முடியாது. காசு பணம் எனக்கு முக்கியம் இல்லை. சாதி பார்த்து திருமணம் செய்ய மாட்டேன். அய்யா பெரியார் எந்த பையனை சொல்றாரோ அவருக்கு தான் திருமணம் செஞ்சு வைப்பேன்னு சொல்லிட்டாக. பின்ன அய்யா தான் இந்த டர்பிடோவுக்கு கடுதாசி போட்டு வரவழைச்சு திருச்சில பெரியார் மாளிகைல அம்பதாறுல திருமணம் ஆச்சுது. பெரியாரே செலவு செஞ்சு சுயமரியாதை திருமணம் செஞ்சு வச்சாரு. அப்போ எனக்கு 20 வயசு. டர்பிடோவுக்கு 38 வயசு. டர்பிடோ தெலுங்கர். நாயுடு சாதி. நானோ செட்டியார் சாதி. எங்க ஒரே பொண்ணு டாக்டர் வெண்ணிலா திராவிட சாதி"ன்னு சொல்லிட்டு சிரிச்சாங்க.

மேலும் நிறைய விஷயங்கள் டர்பிடோ அவர்களை பத்தி பேசினாங்க. அவரின் ஆங்கில புலமை, கலைஞரின் "கிழவன் கனவு" என்னும் புத்தகத்துக்கு டர்பிடோ எழுதின முன்னுரை, அண்ணா பத்தி டர்பிடோ எழுதிய புத்தகம், பெரியார் பத்தி எழுதிய புத்தகம் எல்லாம் சொன்னாங்க. மேலும் "தம்பி, ஒரு திருமணத்துக்கு போவதுக்கு தானே புருஷன் பொண்டாட்டி எல்லாம் ஜோடியா போவாங்க. ஆனா நாங்க ஜெயிலுக்கே ஜோடியாத்தான் போவோம்"ன்னு சொன்னாங்க. இவங்க திராவிட போராட்டங்கள் இந்தி எதிர்ப்பு உள்ளிட்ட பல போராட்டங்களுக்கு சிறை சென்றவங்க. பின்னர் என்ன சாப்பிடுறீங்கன்னு கேட்ட போது ஒன்றும் வேண்டாம் என்றோம். ஆனால் மோர் குடுத்தாங்க. (இதை ஏன் இங்கே பதிவு செய்கிறேன் எனில் மோர் குடித்ததை பதிவு செய்தால் கிச்சன்ல மோர் குடிச்சுட்டு பழத்தை வாங்கிக்கொள்ளும் புள்ளையார்ன்ன்னு நாலு பேர் புகைச்சலாக எழுதட்டுமே என்று தான். அதை படிக்கும் நாலு பேர் சிரித்து சந்தோஷமாக இருந்தா சரி தான்)

ஆக இப்படிப்பட்ட மனோரஞ்சிதம் அம்மையார் அவர்கள் நேற்று நம்மை விட்டு பிரிந்து இயற்கை எய்தினார்கள். மரணத்தை மிக சந்தோஷமாக எதிர்கொண்டு பாரதியை போல "காலா என் அருகில் வாடா உன்னை என் காலால் எட்டி உதைக்கிறேன்" என்கிற வகையில் சந்தோஷமாக எதிர்கொண்டு மறைந்தார்கள். இறந்த பின்னர் தன் உடலை மருத்துவ படிப்புக்கு பயன்படும் வகையில் "உடல் தானம்" செய்ய வேண்டும் என சாசனம் எழுதி வைத்து விட்டு இறந்து விட்டார் அம்மையார். இதோ எங்கள் முகநூல் தோழர் திரு. அருள்பிரகாசம் சார் (காஞ்சிபுரம்) அவர்களின் தந்தையாரும் தாயாரும் உடல் தானத்துக்கு சாசனம் எழுதி வைத்தது போல, எங்கள் எதிர்கால தமிழகம் தளபதியும்,  அண்ணியாரும் தங்கள் மறைவுக்கு பின்னர் உடல்தானம் எழுதி வைத்துள்ளது போல, சாலை இளந்திரையன் தம்பதிகள் எழுதி வைத்தது போல நம் மனோரஞ்சிதம் அம்மையாரும் உடல்தானம் செய்துள்ளார்கள்.

இன்று பொதுமக்கள் பார்வைக்காக சென்னை பெரியார் திடலில் அம்மையார் உடல் பகலில் வைக்கப்பட்டு இருக்கும், பின்னர் அரசு பொது மருத்துவமனைக்கு அளிக்கப்படும்  என ஆசிரியர் தனது இரங்கல் செய்தியில் சொல்லி இருக்கின்றார். தலைவர் கலைஞர் அவர்களும் தனது இரங்கல் செய்தியினை தெரிவித்துள்ளார். அம்மையாரைப் பற்றியும் மறைந்த திரு.டர்பிடோ ஏ.பி.ஜனார்தனம் அவர்களை பற்றியும் நிறைய எழுதலாம். அத்தனை விஷயங்கள் உள்ளன.

அம்மையார் திருமதி.மனோரஞ்சிதம்  புகழ் ஓங்குக! எங்கள் வீரவணக்கங்கள் உரித்தாகுக!

No comments:

Post a Comment

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))