பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

January 10, 2018

“தெற்கிலிருந்து ஒரு சூரியன்” - திராவிட நூற்றாண்டில் ஒரு பயணம் என்னும் நூல் குறித்த எனது பார்வை - பாகம் 1 “தெற்கிலிருந்து ஒரு சூரியன்” - திராவிட நூற்றாண்டில் ஒரு பயணம் என்னும் நூல் குறித்த எனது பார்வை தான் இந்த கட்டுரை! “தி இந்து - தமிழ் நாளிதழ் வழங்கும் “தமிழ் திசை” பதிப்பகம் வழங்கும் இந்த நூல் பற்றிய என் பார்வைக்கு முன்னர் அதன் முன்னூட்டமாக நான் நாகு சம்பவங்கள் பற்றி சொல்லி பிள்ளையார் சுழி போட்டு விட்டுதான் போக நினைக்கின்றேன்!

சம்பவம் 1 : கடந்த பிப்ரவரி மாதம் 2012ம் வருடம் முதல் வாரத்தின் போது எனக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. “வணக்கம்! அபிஅப்பா என்கிற தொல்காப்பியன் தானே இது” என்றது. நான் “ஆமாம் சார், நீங்க?” என்றேன்! அதற்கு “சார்! என் பெயர் சமஸ். விகடன் குழுமத்திலே இருந்து பேசுறேன். உங்க வலைப்பூ எல்லாம் படிச்சு இருக்கேன். வலைப்பதிவாளர்கள் பத்தி எங்கள் விகடனில் எழுத இருக்கோம். முதல் வாரத்தில் உங்களை முடிவு செஞ்சிருக்கோம். உங்க குடும்ப புகைப்படம் மற்றும் உங்க விபரம் எல்லாம் எனக்கு மெயில் பண்ண முடியுமா? உங்க வலைப்பூ பதிவில் இருந்து நல்ல பதிவா நாங்களே எடுத்து போட்டுக்குறோம்” என்றார். எனக்கு சந்தோஷம் ஒரு பக்கம் காற்றில் மிதப்பது போல... அதே நேரம் அவன் சொன்ன பெயர் எனக்கு மனதில் பதியவில்லை. இரண்டு மூன்று முறை கேட்டும் அது மனதில் வந்து குந்தவில்லை. “சார், கொஞ்சம் ஸ்பெல்லிங்கோட சொல்றீங்களா?” என்றேன். அதற்கு அவர் “சார், சமஸ்கிருதம் தெரியுமில்லையா... அதில் வரும் முதல் மூன்று எழுத்துகள் தான் என் பெயர்” என்றார். ஓ....இப்படி ஒரு பெயரா என கொஞ்சம் வியந்து கொண்டேன். பின்னர் அடுத்த வாரம் அதாவது 15.02.2012 ஆனந்த விகடன் இதழின் இணைப்பாக “என் விகடன்” இதழில் அட்டைப்படத்தில் என் வண்ண புகைப்படம், மற்றும் நடுப்பக்கத்தில் என் பற்றிய குறிப்புகள், நான் என் மகள், மகன் சகிதம் இருக்கும் புகைப்படம், என் பதிவுகளில் சில முக்கிய பதிவுகள் என வெளிவந்தது. அந்த இதழ் வெளிவந்த அன்று எங்கள் வலைப்பூ சகோதரி டாக்டர்  ரோகினியின் திருமணம் திருக்கடையூரில் நடந்தது. அதன் பொருட்டு அத்தனை பிரபல வலைப்பதிவர்களும் மயிலாடுதுறைக்கு வருகை தந்திருந்தனர். எல்லோருக்கும் மட்டற்ற மகிழ்வு! ஒரே கொண்டாட்டம்! என் வலைப்பூவுக்கு உலகலாவிய அங்கீகாரம் கிடைத்தது போல பேரானந்தம். மேலும் திரு. சமஸ் அவர்கள் மீது எல்லைகடந்த அன்பு. அவரை ஒரு முறை நேரில் பார்த்து நன்றி தெரிவித்துக்கொள்ள ஆசைப்பட்டேன்.

சம்பவம் 2: செப்டம்பர் மாதம், 2013ம் ஆண்டு இந்தியாவின் மிகப்பிரலமான “The Hindu"  நாளிதழ் தன் தமிழ்ப்பதிப்பை ஆரம்பித்தது. இந்தியா முழுமைக்கும் அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள் என விளம்பரம் ஆஹா ஓஹோ என கொடிகட்டி பறந்தது.  நிச்சயம் அது ஒரு தரமான பத்திரிக்கையாக இருக்கும் என எல்லோருமே நம்பினார்கள். காரணம் “சிவப்பா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்” என்னும் பொதுபுத்தி தான் :-)  19.09.2013  என நினைக்கின்றேன்.. முதல் இதழ் வெளி வந்தது. 16 பக்கங்கள் மெயின் பேப்பர், அடுத்து மேலும் 16 பக்கங்களுக்கு இன்னுமொறு மெயின் பேப்பர், தவிர திருச்சி பதிப்புக்காக எட்டு பக்கம் என ஆக மொத்தம் 40 பக்கங்கள் வெளியான அந்த முதல் இதழில் “கருணாநிதி” என்னும் பெயர் என்பது கிடையாது. இத்தனைக்கும் தலைவர் கலைஞர் அவர்கள் அரசியலில் உச்சகட்டமாக அடுத்து வர இருக்கு நாடாளுமன்ற தேர்தல் முனைப்பிலும் தவிர பத்தாவது மாநில மாநாடு நடத்தி விடலாம் என்னும் சிந்தனையிலும் இந்திய அரசியலில் தவிர்க்க இயலாத மாபெரும் சக்தியாக, இருந்த நேரம். ஆனால் அன்று வெளியான “தி இந்து தமிழ் நாளிதழில்” மருந்துக்கு கூட கருணாநிதி என்னும் பெயர் இடம்பெறவில்லை. நான் ஆர்வமுடன் முதல் இதழை வாங்கி அரக்க பரக்க “கருணாநிதி” என்னும் பெயரை தேடித்தேடி அலுத்து விட்டேன். மிகுந்த கோவத்தில் என் வலைப்பூவில் “"தி இந்து" - தமிழ் தினசரி நாளிதழ் - "தரம்" பத்து பைசா!!!” என்னும் கட்டுரையை எழுதி முடித்து விட்டேன். அத்தனை கோவம் எனக்கு! ஒரு நூற்றாண்டு கண்ட பத்திரிக்கையின் தமிழ் பதிப்பில் வாழும் தமிழாக இருக்கும் கலைஞர் பற்றி வசைபாடியாவது ஒரு வார்த்தை எழுதாமல் அவரை புறக்கணித்த செயல் என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அதனால் மனம் போன போக்கில் எழுதி குவித்து விட்டேன்.

சம்பவம் 3:  திருச்சியில் திமுகவின் பத்தாவது மாநில மாநாடு பிப்ரவரி 15,16 தேதிகளில் 2014ம் ஆண்டு நடக்க தேதி குறித்து விழா ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடந்து கொண்டிருந்தன. எல்லா பத்திருக்கைகளும் அதே செய்தியை தான் வெளியிட்டன. எங்கும் பரபரப்பு. யார் பேசினாலும் திருச்சி திமுக பத்தாவது மாநில மாநாடு பற்றிய பேச்சுகள் தான். இந்த நிலையில் அதாவது மாநாடு நடக்க இருந்த பதினைந்து நாட்கள் முன்பாக ஜனவரி 31ம் தேதி, 2014ல் இதே “தி இந்து தமிழ் நாளிதழ்” ஒரு அரைப்பக்க கட்டுரை வெளியிடுகின்றது. தலைப்பு என்ன தெரியுமா? ”ஒரு பேரியக்கத்தின் அஸ்தமனம்” . இது தான் அந்த தலைப்பு. முழுக்க முழுக்க தலைவர் கலைஞர் தலைமையிலான இந்த திமுக அஸ்தமனம் ஆகிக்கொண்டிருப்பதாக கட்டுரை சொன்னது. படிக்க படிக்க கோவம், கண்ணீர் என எனக்கு தாங்க முடியவில்லை. கட்டுரையின் முடிவில் எழுதியது யார் என போட்டிருந்தார்கள். எழுதியவர் “சமஸ்” அவர்கள். நண்பர் சமஸ் அவர்கள் அப்போது விகடன் குழுமத்திலிருந்து தி இந்து தமிழ் நாளிதழுக்கு சென்று விட்டார். எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. நான் மிகுந்த மதிப்பு வைத்திருந்த ஒரு நண்பர் இப்படி ஒரு கட்டுரை எழுதினால் என்னவென்று சொல்வது? அதுவும் தன் முதல் இதழில் தலைவர் கலைஞர் அவர்களை புறக்கணிப்பு செய்த பத்திரிக்கையில் இன்னும் 15 நாளில் 25 லட்சம் திமுக தொண்டர்கள் கூட இருந்த நிலையில் இப்படி ஒரு கட்டுரை அரைப்பக்கம் வருகின்றது எனில் என்ன காரணமாக இருக்கும் என்பதை உங்கள் யூகத்திற்கே விடுகின்றேன்.


சம்பவம் 4:  பிப்ரவரி 15,16, 2014 திமுக பத்தாவது மாநில மாநாடு திருச்சியில் நடைபெறுகின்றது. இரண்டாம் நாள் அதாவது 16.2.2014 அன்று திமுகவின் அண்ணன் துரைமுருகன் அவர்கள் பேசுகின்றார்... அவருக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு என்ன ஏது என்றெல்லாம் கிஞ்சித்தும் கவலை கொள்ளவில்லை. 15 நாட்கள் முன்பாக தி இந்துவில் வந்த அந்த “பேரியக்கத்தின் அஸ்தமனம்” கட்டுரையை எடுத்து பிரித்து மேய்கின்றார். கட்டுரையாளர் சமஸ் அவர்களை தூக்கி போட்டு பந்தாடுகின்றார். மேடையில் தலைவர் கலைஞர், பேராசிரியர்,  நம் செயல்தலைவர், தோழமை கட்சி, கூட்டணி கட்சி தோழர்கள் என எல்லோரும் இருக்கின்றனர். கூட்டத்தில் நம் இணைய தோழர்கள் தினகரன் அரசு உள்ளிட்ட நாங்கள் ஒரு குழுவாக அமர்ந்து கேட்டுக்கொண்டு இருக்கின்றோம். மேடையின் இடது பக்கத்தில் அரியலூர் மாவட்ட செயலாளரும், குன்னம் சட்டமன்ற உறுப்பினருமான திரு எஸ்.எஸ் சிவசங்கர் அவர்கள் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு மேடையில் தாவி ஏற வரும் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் இருக்கும் போது அண்ணன் துரை முருகன் அவர்கள் பேச்சுக்கு இங்கே விசில் பறக்கின்றது. எழுந்து நின்று கை தட்டுகின்றோம். கூட்டத்தை கட்டுப்படுத்தும் வேலையை விட்டு விட்டு மேடையிலிருந்த திரு. எஸ்.எஸ் சிவசங்கர் சார் அவர்கள் துரைமுருகன் அண்ணன் அவர்கள் பேச்சை அருகில் நின்று கேட்டு மெய்மறந்து நிற்கின்றார். ஆக கடந்த 15 நாட்களாக “பேரியக்கத்தின் அஸ்தமனம்” என்னும் நெஞ்சில் பாய்ந்த முள்ளை எடுத்து வீசிவிட்டு அந்த காயத்தில் களிம்பு தடவும் அண்ணன் துரைமுருகன் அவர்கள் பேச்சு அன்றைக்கு அப்படி ஒரு பேச்சு!

***************


ஆக மேற்கண்ட இந்த நான்கு சம்பவங்களும் இப்போது நான் படித்து முடித்த “தெற்கிலிருந்து ஒரு சூரியன்” புத்தகத்தை படித்து முடித்த போது நெஞ்சில் நிழலாடுவதை என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை என்பதால் முதலில் அதை பகிர்ந்து கொண்டு பின்னர் அந்த புத்தகத்துக்கு வருகின்றேன். மேலே சொன்ன சம்பவங்களில் சம்பவம் 2ல் நான் என் வலைப்பூவில் “"தி இந்து" - தமிழ் தினசரி நாளிதழ் - "தரம்" பத்து பைசா!!!” என எழுதினேன் என்று சொன்னேன் அல்லவா... அதில் முத்தாய்ப்பாக ஒரு வரி எழுதி இருந்தேன்... //40 பக்கம் நான்கு ரூபாய். அதாவது பக்கத்துக்கு பத்து பைசா விலை! இதன் "தரமும்" பத்து பைசா மதிப்பிலானது மட்டுமே! இந்த பத்து பைசா என்னும் தரத்தை “தி இந்து  தமிழ் நாளிதழ்” உயர்த்திக்கொள்ள வேண்டும் எனில் இதே புறக்கணிக்கப்பட்ட அந்த மாபெரும் பத்திரிக்கையாளர் - அரசியல்வாதி போன்ற பன்முகம் கொண்ட தலைவர் கலைஞரை பற்றி “உண்மை” களை எழுதி பிராயச்சித்தம் தேடிக்கொள்வதை தவிர வேறு வழியில்லை! // இது தான் அந்த முத்தாய்ப்பு வரிகள்! ( அந்த வலைப்பூவின் சுட்டி இதோ http://abiappa.blogspot.com/2013/09/blog-post_16.html ) ஆக சுமார் நான்கு ஆண்டுகள் கழித்து தி இந்து தமிழ்நாளிதழ் மற்றும் “தெற்கிலிருந்து ஒரு சூரியன்” புத்தகத்தின் நூல் பொறுப்பாசிரியருமான திரு சமஸ் அவர்களும் ஒரு அருமையான பிராயச்சித்தம் தேடிக்கொண்டனர்.

தலைவர் கலைஞர் அவர்களை தன் முதல் இதழில் புறக்கணித்தமைக்காகவும், பேரியக்கத்தின் அஸ்தமனம் என எழுதியமைக்காக திரு. சமஸ் அவர்களையும் நான் நிந்தித்தேன். அதற்காக இந்த நூலை படித்த பின்னர் இப்போது வருத்தமும் தெரிவித்து பகிரங்க மன்னிப்பும் கேட்டுக்கொள்கின்றேன். ஏனனில் புத்தகம் அல்ல அது. சுமார் நூறாண்டு கண்ட திராவிட இயக்கத்தின் பொக்கிஷங்களில் ஒன்று! திமுகவினர் வீட்டில் வைத்து பாதுகாக்க வேண்டிய ‘பத்திரம்’ அது! கலைஞர் என்றாலே எட்டிக்காயாக மனதில் பதியம் போட்டு வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம் இது!

மொத்தம் 210 பக்கங்கள்! அத்தனையும் முத்துக்கள். அட்டையையும் விட்டு வைக்கவில்லை. “தமிழ்வெல்லும்” என தலைவர் கலைஞரின் கையெழுத்தால் ஆரம்பிக்கப்பட்ட புத்தகத்தின் கடைசி பி அட்டையில் நம் அண்ணா அவர்கள் திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டதையும், அதற்கான காரணங்கள் இன்னமும் இருக்கின்றன என விளக்கம் கொடுத்தமையுடன் முடிகின்றது அந்த புத்தகம்!

அந்த புத்தகம் தனி ஒருவரால் எழுதப்பட்டது அல்ல. அதை ஒரு தொகுப்பு. தலைவர் கலைஞர் அவர்களை பற்றி மேல்நாட்டு அறிஞர் டேவிட்ஷூல்மன் (சங்க இலக்கியத்தை ஹீப்ரூ மொழியில் மெழிபெயர்த்தவர்) முதல் கலைஞரின் உதவியாளர்கள்  திரு.நித்யா, சமையல் பணியாளர் திரு முத்து செல்வம் பிரகாஷ் வரை இந்த புத்தகத்தில் வாழ்ந்திருக்கின்றார்கள். தலைவர் கலைஞரையும், திராவிடத்தையும் வாழ்த்தியிருக்கின்றார்கள்.

இந்தியாவின் சிறந்த அரசியல்வாதிகள், தோழமை கட்சி தலைவர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள், முன்னாள் பிரதமர், நீதியரசர்கள், காவல்துறை உயரதிகாரிகள், இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள், இந்திய காவல்பணி அதிகாரிகள், பிரபல பத்திரிக்கையாளர்கள், நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர்கள், தலைவர் கலைஞரின் வாரிசுகள், உறவினர்கள் அத்தனை ஏன்.... சாமானியர்கள் கூட கலைஞரை பற்றி தங்கள் எண்ணங்களை ஆசையுடன் தெரிவித்துள்ளனர். மேற்கண்ட எல்லா பிரிவினரும் தங்கள் சார்ந்த துறையில் கலைஞரின் செயல்பாடுகள் என்ன என்பதை சொல்லும் போது பிரம்மிப்பு தான் மேலிடுகின்றது!

அதில் சில பொருளாதார கட்டுரைகள் .... எனக்கு எப்போதுமே... எனக்கு மட்டுமல்ல நான் பொதுவாக சொல்கிறேன்... பொருளாதார கட்டுரைகள் படிக்கும் போதே பாதியில் நல்ல தூக்கம் வரும். நான் கூட நினைப்பதுண்டு... இவர்கள் தங்கள் பேனா மையில் நைட்ரோவிட் கலந்து எழுதுகின்றார்களா என்று. ஆனால் இந்த புத்தகத்தில் அப்படி இல்லை. கொஞ்சம் கலோக்கியல் மாத்திரையும் கலந்து கொடுத்திருப்பது தான் சிறப்பு! அதற்கு பின்னர் வருகின்றேன்!

முதலில் நான் சிலாகித்த கட்டுரை என்பது எழுத்தாளர் ஒருவர்  எழுதியது. ஒரு வேளை... ஒரு வேளை என்னை எழுதியிருக்க சொல்லியிருந்தால் அந்த மூன்று பக்கங்கள் எழுத்தாளர் இமயம் என்னும் பெயருக்கு பதில் “சாமானியன் அபிஅப்பா” என வந்திருக்க கூடும். அதை எழுதியது ஒரு சாதாரணன். திட்டக்குடி ஆள். அவர் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்ப்பினர் என்பதை அவரது வாக்கியங்கள் மூலம் உணர்கின்றேன். அவர் எழுத்து என்பது தான் அபாரம். அந்த சிறுவன் கட்சியில் எப்படி சேர்ந்தான்.. அதற்கு அவன் வாடகை சைக்கிள் எடுத்து போன விஷயம்.. அங்கே டீக்கடை வைத்திருக்கும் ஒன்றிய செயலர் தனக்கும் டேபிள் மீது இலை போட்டு இட்லி வைத்து உபசரித்து, கட்சியில் சேர படிவம் கொடுத்து.... அடடே.. அடடே.. அந்த சின்ன பையன் சின்ன வயதில் “நம்மையும் மதித்து டேபிள், சேர், வாழை இலை.. அதில் இட்லி, பின்னர் தோளில் கை போட்டு உறுப்பினர் படிவம்... இதை படிக்கும் போது சிலிர்க்காமல் இருந்தால் அது அனேகமாக “அந்த 74 நாட்கள்” புகழ் ஜெயாவாக மட்டுமே இருக்க முடியும்! அந்த பையன் கட்டுரையை முடிக்கின்றார்.... (கவனியுங்கள்... பையன் சின்னவனா இருந்த போது ந் விகுதி... இப்போது இர் விகுதிக்கு நான் வந்து விட்டேன். //  அவனுடைய வாழ்க்கையில் கலைஞருக்கு யாரெல்லாம் எதிரிகளோ அவர்கள் எதிரிகள். கலைஞருக்கு பிடித்தமானவர்கள் அவனுக்கும் பிடித்தமானவர்கள். எம்.ஜி.ஆருக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம்? ஆனால் கலைஞரை காட்டிலும் 100 மடங்கு பகை அவனுக்கு இருந்தது. அவர் நடித்த சினிமாக்கள் கூட பார்க்க மாட்டான். அப்படித்தான் ஜெயா மீதும், வைக்கோ மீதும், பயணங்கள் போது கலைஞரை பற்றி யாராவது குறை சொன்னால் பாய்ந்து விடுவான். தன் அப்பா, அம்மாவை திட்டினால் கூட அமைதி காப்பான். கலைஞரை திட்டி விட்டால் அவ்வளவு தான்/// இது தான் அந்த வைர வரிகள். அதில் முத்தாய்ப்பு வைக்கிறார் பாருங்கள்.....

// “இன்று அவன் பெயர் இமையம். எழுத்தாளர். யோசித்துப்பார்க்கின்றார். கட்சி அவருக்கு கொடுத்தது என்ன? நேரிடையாக அவருக்கு அது அள்ளிக்கொடுத்து விடவில்லைதான்! ஆனால் ‘கட்சி கூட்டத்துக்கு வா! கட்சிக்காரன் திருமணத்துக்கு வா! கட்சிக்காரன் செத்து விட்டான் வா!//  என அவனை சாதி பாராமல் அழைக்கும் தகுதியை அந்த உறுப்பினர் கார்டு அவருக்கு கொடுத்ததை சொல்கின்றார் அந்த எழுத்தாளர் இமையம்! 

கட்சியில் அவருக்கு பொறுப்பு கிடையாதாம். அவரே சொல்கின்றார். ஆனால் பெரிய பதவி ஒன்று உண்டாம். ஆனால் தலைவர் கலைஞர் ஊருக்கு வந்து விட்டால் உச்சஸ்தாயில் “டாக்டர் கலைஞர் வாழ்க” என்னும் அந்த பொறுப்பை மட்டும் அவரிடமே வைத்துள்ளாராம்... இதில் போட்டி போட எந்த சாதி வேண்டுமாகின் வந்து பார்க்கட்டும் என மல்லுகட்டும் உயர்தர திமுககாரர் கட்டுரை அது! இந்த நேரத்தில் நான் என் வலைப்பூ பதிவான '’கலைஞரின் சொத்து மதிப்பு எத்தனை கோடி?' ( http://abiappa.blogspot.com/2012/01/blog-post_05.html ) என்னும் பதிவை நினைத்துப்பார்க்கின்றேன். எழுத்தாளர் இமையம் என்பர் இருக்கும் இடம் நோக்கி கரம் குவிக்கின்றேன்!

ஒரு கட்டுரை ... நான் ஏற்கனவே தலைவர் கலைஞர் அவர்களின் நேர்முக அரசு உதவியாளர் திரு சண்முகநாதன் அவர்கள் பதிவை முழுவதும் பதிந்து விட்டேன். அது பற்றி பின்னர் பேசுகின்றேன். அடுத்து தலைவர் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்த போதும், இப்போது ஓய்வுபெற்ற போதும் (நான் நேர்முக உதவியாளர் பற்றி சொன்னேன்... தலைவருக்கு ஓய்வு ஏது?) இப்போதும் உடனிருக்கும் திரு. இராஜமாணிக்கம் அவர்கள்! மிக மிக மிக அருமையான கட்டுரை அது! அடிப்படையில் திரு இராஜமாணிக்கம் அவர்கள் ஒரு மொழிப்போர் தியாகி. திரு. எம். நடராசன் அவர்கள் போன்ற மொழிப்போர் தியாகி! எம். நடராசன் என்பவர் சமீபம் 30 ஆண்டுகளாக மட்டுமே சசிகலா நடராசன் என நம்மாள் அறியப்பட்டார் என்பது தான் காலக்கொடுமை. திரு. எம் நடராசன் அவர்களோடு மொழிப்போர் தியாகிகள் தான் திரு. இராசமாணிக்கம் அவர்கள்.  திரு இராசமாணிக்கம் அவர்கள் ஒரு படிப்பறிவு இல்லாத கிராமத்தில் பிறந்த சாதாரண ஆள். அதிலே படித்து இன்றைக்கு இந்திய ஆட்சிப்பணி அதிகாரி ஆகி ஓய்வு பெற்று இப்போதும் தலைவர் கலைஞர் கூட இருப்பவர்.  (இவரைப்பற்றி கூட என் வலைப்பூவில் நான் எழுதியதை பார்க்க வேண்டுமா ... இங்கே பாருங்கள் http://abiappa.blogspot.com/2012/06/blog-post_12.html ) இவரது அந்த கட்டுரை அல்லது நேர்காணல் என எதுவேண்டுமாகின் வைத்துக்கொள்ளுங்கள்...

அதில் ஒரு கேள்வி... “தலைவர் கலைஞர் எதற்கெல்லாம் கோபப்படுவார்?”  ... இவர் பதிலை பாருங்கள்.... பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் விஷயம் வரும் போது அதில் வார்த்தை தவறி யாராவது பிற்ப்பட்டோர் என சொல்லி விட்டால் கோபப்படுவார்.

ஆக நான் மேலே சொன்ன ஒரு வரி என்பது ஒரு பி ஹெச் டிக்கான ஆய்வு கட்டுரைக்கான தலைப்பு! ஒரு முனைவர் பட்டத்துக்கான தலைப்பு என் தலைவரின் சாதாரண ஒரு சொல் வாக்கியம் என்பதை உணர்க! இதில் ஒரு சமூக கருத்தும், தமிழ் விளையாட்டும் இருக்கின்றது. பிற்படுத்தப்பட்டோர் என்னும் சொல்லாடலுக்கும் பிற்பட்டோர் என்னும் சொல்லாடலுக்கும் இருக்கும் வித்யாசத்தை எவன் ஒருவன் உணர்கின்றானோ அது தான் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் உள்ள வித்யாசம்! தட்ஸ் ஆல்!

பிற்ப்பட்டோர் என சொன்னால் அவன் நிஜமாகவே பிற்ப்பட்டவன்... ஆனால் பிற்படுத்தப்பட்டவன் என சொன்னால் அவனுக்கு மேலே ஒரு ஆதிக்க சாதி இருந்து செயல்பட்டது என்பது பொருள். அவனை பிற் படுத்தினார்கள் யாரோ என்னும் பொருள் இருக்குதா இல்லியா? திரு. இராஜமாணிக்கம் என்னும் அவரது ஐ ஏ எஸ் படித்த உதவியாளர் அந்த பேட்டியில் ஜஸ்ட் லைக் தட் சொல்லி விட்டு சென்ற வார்த்தைகளில் தலைவர் கலைஞர் விளையாடியதை காண்பீர் மக்களே! காண்பீர்!

நம் செயல்தலைவர் அவர்களிடம் ஒரு பேட்டி... அடடா அருமை...

அப்பா உங்களை அடித்தாரா போன்ற சில்லி கேள்விகள்.. அதை விடுங்கள்.. ஆனால் அவரது பதில்கள் தான் அற்புதம்... செயல்தலைவரின் பதில்களில் இருந்து ஒரு விஷயம் நன்கு புரிந்து கொள்ள இயலும்.... இதை எத்தனை பேர் உணர்ந்தார்கள் என புரியவில்லை. எம் தலைவர் செயல்தலைவர் அவர்கள் என்பது ஒரு சுயம்பு... யாரும் கைதூக்கி வளராது தானாக வளர்ந்த சுயம்பு என்பது புரிய வரும்!  சொல்கிறேன் கேளுங்கள்...

பொதுவாக நம் பிள்ளைகள் விஷமம் செய்தால் என்ன செய்வோம். அதிக பட்சம் பக்கத்து வீட்டு ராமநாதன் கிட்டே சொல்வோம்... “சார் அவன் சைக்கிள்ல ரொம்ப வேகமா போறான். நான் சொன்னா கேட்க மாட்டான். நீங்களாவது கொஞ்சம் அதட்டி சொல்லுங்க சார்” ... இதானே நடக்கும்.. ஆமாம் அதான் நடந்தது. செயல்தலைவர் விஷயத்திலும் அதான் நடந்தது.என்ன ஒன்று... நம் லெவலுக்கு பக்கத்து வீட்டு ராமநாதன். தலைவர் கலைஞர் லெவலுக்கு எம்.ஜி. ஆர். அது தான் நடந்தது. “இனி நீ திமுக கூட்டம் எல்லாம் போடக்கூடாது. இது தான் உன் அப்பா விருப்பம்” என எம் ஜி ஆரால் அன்பாக கண்டிக்கப்பட்டவர் தான் நம் செயல்தலைவர்! எம் ஜி ஆரால் கண்டிக்கப்பட்டவர்கள் பலருண்டு. அதில் சிலர் இப்போது சுண்டு விரல் மற்றும் ஆட்காட்டி விரல் மட்டும் நீட்டி மற்ற விரல் மடக்கி காண்பிக்கின்றனர். ஆனால் அந்த 16 வது வயதில் தன் நடுவிரலை மட்டும் நீட்டி காண்பித்தவர் தான் நம் செயல்தலைவர் அவர்கள்!

எம். ஜி .ஆர் அவர்களை அழைத்து வந்து கோபாலபுரம் வாசலில் போட்ட அண்ணா பிறந்தநாள் கூட்டம் போட்டவர் அவர்! முரசே முழங்கு என்னும் நாடகத்தை தமிழகம் முழுமையும் 40 இடங்களில் நடத்தி விட்டு வந்து 1971ல் திமுக வெற்றி பெற்றதும் வெற்றிக்கூட்டம் நடத்தியவர் தான் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின். ஆக நம் செயல் தலைவரின் முதல் பிரச்சார வெற்றி என்னும் அந்த 185/234 என்பதை இன்னும் திமுகவே எட்டவில்லை. அப்போது அந்த “முரசே முழங்கு”் நாடகத்தி வெற்றி விழா எம். ஜி ஆர் தலைமையில் நடந்த போது தலைவர் கலைஞர் சொன்னார்... “இது நிறைவு விழா” என்று. ஆனால் நம் செயல்தலைவரோ “இது முடிவல்ல... ஆரம்பம்” என்றார் அப்போதே... ஆக நம் தலைவர் என்னும் சூராவளியால் தடுக்க இயலா சுயம்பு தலைவர் தான் எம் சுனாமி செயல்தலைவர் அவர்கள்!

அடுத்து தலைவரின் தவப்புதல்வி திருமதி கனிமொழி அவர்களின் பேட்டி!

அந்த கட்டுரையில்.... மாடியில் தலைவர் கலைஞர் அவர்களை சந்தித்து விட்டு  திரு முரசொலி மாறன் அவர்கள் வேகமாக மாடிப்படி  இறங்கி வருகின்றார்கள். கீழே சிறுமியாக நம் இப்போதைய திமுக பாராளுமன்றக்குழு தலைவர் திருமதி கனிமொழி அவர்கள்! அந்த சிறுமியை பார்த்து நின்று அய்யா முரசொலி மாறன் சொல்கின்றார் “உன் அப்பாவை எல்லா நேரத்திலும் அரசியல்வாதியாக இருக்க சொல்லாதே” என! பின் கார் கிளம்பி செல்கின்றது. சிறுமி கனிமொழி மேலே செல்கின்றாள்... அப்பாவை பார்க்கின்றாள்... “என்னம்மா உன் பெரிய அத்தான் என்ன சொல்லிட்டு போறான்?” என்கிறார் தலைவர்!

அந்த சிறுமிக்கு அந்த நேரத்தில் தன் தந்தையின் வாசகங்கள் மனதில் படியவில்லை. தன் பெரிய அத்தான் திரு.முரசொலி மாறன் சொன்ன வார்த்தைகள் தான் மனதில் பதிகின்றன! நான் நினைத்துப்பார்க்கின்றேன். பல சமயம் சில விவாதங்களில் “அபிஅப்பா நீங்க அவர் இடத்தில் இருந்து பாருங்க” என்னும் சொல் திருமதி கனிமொழி அவர்களிடத்தில் இருந்து வரும்! நான் அமைதியாகிவிடுவேன். இந்த இடத்தில் நான் நினைத்துப்பார்ப்பது ஒரு விஷயம்  .... நம் செயல்தலைவர் “அவரை நான் மட்டுமல்ல, என் தங்கை கனிமொழி மட்டுமல்ல எல்லோருமே தலைவர் என்று தான் அழைப்போம்” என்னும் வாக்கியம் பாருங்கள். அதுவும் உண்மை தான். நானே பலமுறை திருமதி கனிமொழி அவர்களிடம் கேட்டுள்ளேன். தலைவரை எப்படி அழைப்பீர்கள் என்று!

அதற்கு அவர்கள் ஒரு முறை  “தி ரோஸ் ஈஸ் தி ரோஸ் ஈஸ் தி ரோஸ்.... என சொல்லி சிரித்தபடியே... “நான் மட்டுமல்ல, அண்ணன் கூட ... அண்ணன் மட்டுமல்ல என் அம்மா கூட, பெரியம்மா கூட தலைவர்ன்னு தான் சொல்லுவோம்... மிக சில சமயம் நான் அப்பா என்பேன்....” என்றார். இந்த இடத்தில் நான் அய்யா முரசொலி மாறன் அவர்கள் ஒரு சண்டை போட்டுக்கொண்டே கீழே வந்து திருமதி கனிமொழி அவர்களிடம் (அப்போது சிறுமி என வைத்துக்கொள்ளுங்கள்) சொன்னது “எப்போதுமே அரசியல்வாதி என இருக்க சொல்லாதே”...

மனசாட்சியாக இருந்தாலும் கட்சி என வந்து விட்டால் குடும்பம் கூட கட்சி தான் எனத்தான் பார்த்துள்ளார் தலைவர் கலைஞர்!ஆனால் எனக்கென்னவோ அப்படி தெரியவில்லை. அப்படியாகின் “இதோ கீழே இறங்கி போகும் முரசொலி ஆசிரியர் என்ன சொன்னார் என்றோ அல்லது நம் கட்சி எம்.பி என்ன சொன்னார் என்றோ கேட்டிருக்க வேண்டும்! ஆனால் “உன் பெரியத்தான் என்ன சொன்னார்?” என கேட்கும் தொணி என்ன? ஒரு வேளை மனிரத்னம் படம் போல அஷோக்கை கவுதம் என்றோ , கவுதமை அஷோக் என்றோ வேண்டுமென்றே அழைக்கும் விஜயகுமாரின் உத்தியா?  யாமறியேன் பராபரமே!

இதையெல்லாம் விடுங்கள்! இன்னும் ஒரு கட்டுரை இருக்கு.... விடுதலை சிறுத்தைகள் ரவிக்குமார் கட்டுரை தான் அது! அதன் கடைசி வரிகள்!  நான் பார்த்தவரை இந்த பேட்டியாளர்கள், கட்டுரையாளர்கள் எல்லோருமே கடைசி பாராவில் கலங்க வைத்து விட்டனர். ரவிக்குமார் கட்டுரை போலவே தான் திரு சண்முகநாதன் கட்டுரையும்! “அய்யா, நான் 11 மணி வரை இங்க தான் இருக்கேன். என்னை திட்டுவீங்களே! அதற்காகவாவது கூப்பிடுங்கள்” என கதறிய போது கலங்காத நெஞ்சம் உண்டா? அது போலவே ரவிக்குமார் கட்டுரையும் முடிகின்றது..

// விட்ட இடத்தில் இருந்து தான் பேசுவார் அவர். அதாவது மனசில் நம்மோடு பேசிக்கொண்டு இருக்கின்றார். இப்போது அப்படியே தான்... அதாவது என்னோடு பேசிக்கொண்டு தான்  இருக்கின்றார். அது எனக்கு கேட்கின்றது// இந்த விரிகள் படிக்கும் போது தான் நான் அழுதேன்... ஆமாம் நானும் அதை உணர்ந்தேன்... விட்ட இடத்தில் இருந்து தான் அவர் கண்கள் பேசியது. நானும் அதை தொடர்ந்தேன். மௌனம் என்பது அழகிய மொழி என்பது எனக்கும் அப்போது தான் புரிந்தது. ரவிக்குமார் ... நீங்கள் நல்ல எழுத்தாளர் என்பதில் எனக்கு சந்தேகமில்லை!

பேராசிரியர் கட்டுரை... அடடா அருமை! தன் ஊர் அதாவது எங்கள் ஊர் மயிலாடுதுறை பற்றி பேசுகின்றார். அதில் மகாதானத்தெரு, பட்டமங்கலத்தெரு பற்றி பேசுகின்றார்.. அடடா... இந்த புத்தகத்தில் இரண்டு இடத்தில் மயிலாடுதுறை வருகின்றது. 1930களில் மயிலாடுதுறை, மாயூரநாதர் கோவில் பிரவேசம் பற்றிய ஒரு இடத்தில் மற்றும் பேராசிரியர் கட்டுரையில் வருகின்றது. அதில் மகாதானத்தெருவை மகாதேவத்தெரு என எழுத்துப்பிழையா அது அல்லது சொற்ப்பிழையா என தெரியவில்லை. எனக்கு பேராசிரியர் ஞாபக சக்தியில் கிஞ்சித்தும் சந்தேகம் இல்லை. இதை அடுத்த பதிப்பில் திருத்துவார்கள் என நம்புகிறேன். அது போல “ர்” விட்டுப்போன ஒரு இடம் இருக்கு! அது எல்லாம் பெரிய குறை இல்லை இத்தனை பெரிய பொக்கிஷத்தில்!

அண்ணன் துரைமுருகன் கட்டுரை.... ஒரு சமயம் கடையநல்லூரில் இருந்து ராஜாமணி என்கிற தொண்டர் வந்தார். வந்ததும் தன் மாவட்ட உள்ளூர் கோஷ்டி சண்டையை நீளமாக விவரித்தார். கலைஞருக்கு கோபம் வந்தது. “என்னய்யா நான் உசிரை கொடுத்து கட்சியை காப்பாத்திகிட்டு இருக்கேன். நீங்க சண்டை போட்டுகிட்டு இருக்கீங்க”ன்னு செல கோவமா திட்டிட்டார். வந்தவர் போய்விட்டார். பின்னர் என்ன நினைத்தாரோ தலைவர். உடனே எங்களை கூப்பிட்டு அவரை அழைத்து வர சொன்னார். அந்த தொண்டர் பஸ்ஸ்டாண்டு போய்விட்டார். நாங்கள் அவரை பிடித்து அழைத்து வந்தோம். உடனே தலைவர் “யோவ்... நான் என்னவோ கோவத்தில் இருந்தேன். நீ உன் குறையை சொல்ல வந்திருக்க ... இத்தனை தூரம் பயணம் செஞ்சு! நான் பாட்டுக்கு என் கோவத்தை கொட்டிட்டேன். என்னை மன்னிச்சுடுய்யா” என்றார். அந்த பெரியவர் அழுதுவிட்டார். இது தான் கலைஞர் என்று தன் கட்டுரையில் சொல்லி இருக்கின்றார். அண்ணன் துரைமுருகன் போன்றவர்கள் பல நூல்கள் எழுதலாம். அத்தனை கருக்கள் இருக்கின்றன அவர்களிடம்!

இதே போல ஒரு முறை தங்கம் தென்னரசு சார் ஒரு விஷயம் சொன்னார்... “ஒரு முறை ஒரு முக்கியஸ்தர் வர கொஞ்சம் லேட் ஆகிடுச்சு. வந்தவுடன் தலைவர் “ஏன்யா லேட்டு?” என்றார். அதற்கு அவர் “மவுண்ட் ரோட்டுல ரொம்ப ட்ராபிக் ஆகிடுச்சு தலைவரே”ன்னு சொன்னது தான் தாமதம். தலைவர் ரொம்ப கோபமாகிட்டார். “அடடே! அந்த மவுண்ட் ரோடு என்பது அண்ணாசாலை என கெசட்ல மாறிடுச்சுய்யா. இது கூட தெரியாம எப்படி?”ன்னு கேட்டார்” என சொல்ல சொல்ல நாங்கள் எல்லாம் “இதுக்கெல்லாமா கோவப்படுவாங்க” என்பது போல நான்  தங்கம் சாரை பார்த்தேன். “ஐஞ்சு பைச திருடினா தப்பா?” என அன்னியன் கேட்கும் டயலாக் தான் எனக்கு அவர் முகத்தில் தெரிந்தது. அப்போது காரை ஓட்டியது மதன்குமார். காரில் இருந்தது நான், சதக், அறந்தை ராஜுமுருகன், சூரியன் சக்தி, ஆரூர் பாலா... இது நடந்தது இந்த புத்தகம் வெளிவந்த மூன்று ஆண்டுகள் முன்பாக கத்தாரில். ஆனால் இப்போது வெளியான இந்த புத்தகத்தில்  தலைவர் கலைஞரின் நேர்முக உதவியாளர் திரு. ராஜமாணிக்கம் அவர்கள் பேட்டியில் இதே விஷயம் இருக்கின்றது. ஆக தலைவர் கலைஞர் அவர்களின் பர்ஃபெக்‌ஷன் என்பது எல்லா விஷயத்திலும் தெரிகின்றதா?

நான் சொல்ல வந்த விஷயத்தில் கொஞ்சம் கூட சொல்லி முடிக்கவில்லை... நிறைய இருக்கின்றது அந்த புத்தகம் பற்றி!

எனக்கு இந்த புத்தகம் பரிசளித்த என் அன்பு அண்ணன் திரு. கு.மா.பா. இளங்கோவன் அவர்களுக்கு நன்றிகள்!

பின்னர் மீண்டும் தொடர்கின்றேன்....

December 21, 2017

திமுகவின் பொருளாளராக அமர திருமதி. கனிமொழி அவர்களுக்கு காலம் “கனி”ந்து விட்டது! “ஸ்பெக்ட்ரம்” வழக்கில் “திமுக” விடுதலை!  ஆமாம்! இது தனிப்பட்ட நபரான அண்ணன் ஆ.ராசா அவர்கள் விடுதலையோ அல்லது தனிப்பட்ட அம்மா திருமதி தயாளு அம்மையார் அவர்கள் விடுதலையோ அல்லது தனிப்பட்ட திருமதி கனிமொழி அவர்கள் விடுதலையோ என கருத முடியாது! இது திமுகவின் விடுதலை! மேற்சொன்ன தயாளு அம்மையார் அனுபவித்த மன உளைச்சல்,  ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் அடைந்த  மன உளைச்சல், சிறைவாசம், அவமானங்கள் ஆகியவைகளை குறைத்தும் மதிப்பிட முடியாது! அதே நேரம் திமுக என்னும் இயக்கம் பட்ட இன்னல்கள் என்பதை ஒரு பட்டியலில் அடைத்தும் விட முடியாது. திமுக என்பது சுமார் ஒரு கோடி உறுப்பினர்களால் கட்டமைக்கப்பட்ட கோட்டை. அதில் ஒரு செங்கல் பழுதானாலும் அந்த கோடி தொண்டனுக்கும் மன உளைச்சல் தான்! ஆனால் அண்ணா கண்ட அந்த இயக்கத்தை 50 ஆண்டுகளாக எவ்வித சேதாரமுமின்றி காத்து வரும் தலைவர் கலைஞர் அவர்கள் இந்த “ஸ்பெக்ட்ரம்” பழியால் பட்ட வேதனை சொல்லி மாளாது! ஆகவே இது கொண்டாடப்பட வேண்டிய தீர்ப்பு!


எப்படி கொண்டாடலாம் என்பதில் தான் இப்போதைக்கு திமுகவின் கவனம் இருக்க வேண்டும்! அந்த கொண்டாட்டங்கள் தமிழகத்தின் கடைக்கோடி ஆட்களை சென்றடைய வேண்டும்! என்ன செய்யலாம் அதற்கு? ஒரு மாநில மாநாடு நடத்தி “ஸ்பெக்ட்ரம்” விழா எடுக்கலாம்! திமுகவின் 11 வது மாநில மாநாடு “ஸ்பெக்ட்ரம் சிறப்பு மாநாடு” என பெயரிட்டு அதை கொண்டாடலாம். அதற்கு முன்பாக அந்த மாநாட்டு விளக்க கூட்டம் தமிழகம் முழுமையும் நடத்தி பொதுமக்களிடம் நம் அப்பழுக்கின்மையை கொண்டு சேர்க்கலாம்! ஸ்பெக்ட்ரம் வழக்கு என்பதே தனிப்பட்ட நபர்களை அழிக்க நடத்தப்பட்ட வியூகம் அல்ல! 1949ல் ஆரம்பிக்கப்பட்டு அண்ணா அவர்களையும் சேர்த்து ஆறு முறை முதல்வர் பதவியையும் பிடித்த இயக்கம்! சமூக நீதியை காத்த இயக்கம்! அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என சட்டமியற்றிய இயக்கம்! அப்படிப்பட்ட இயக்கத்தை அழிக்க நடந்த யுத்தத்தில் திமுக இப்போது வென்றுள்ளது. ஆகவே இதன் “வெற்றிக்கொண்டாட்டம்” என்பது விண் முட்ட நடத்தப்பட வேண்டியது அவசியம். இந்த ஸ்பெக்ட்ரம் வழக்கு என்பது திமுக என்னும் இயக்கத்தின் மீது மத்திய ஆட்சியாளர்கள் மற்றும் ஆதிக்க சக்திகளை ஒருங்கே தன்னகத்தே கொண்ட  ஒரு விஷப்பாம்பு புற்றான மத்திய தணிக்கைக்குழு, அதற்கு மகுடி ஊதும் பிடாரன்களான ஆதிக்க ஊடகங்கள் ஆகியவைகள் சேர்ந்து தொடுக்கப்பட்ட யுத்தம்! யுத்தகளத்தில் அந்த எதிரணியினர் பிணையாக பிடித்து வைத்து போரை ஆரம்பித்தது யாரைத்தெரியுமா.... தயாளு அம்மையார், ஆ.ராசா, கனிமொழி ஆகியவர்களைத்தான்! இந்த போரில் ஒரு அதிசயம் நிகழ்ந்தது! ஆம்! பிணையில் பிடிபட்டவர்களே யுத்தமும் செய்தார்கள். திமுகவின் ஒட்டு மொத்த படையணியும் ஊக்கம் கொடுத்தது! இயக்க தலைமையோ தன் முழு ஆதரவையும் கொடுத்து அழகு பார்த்தது! பிணையில் பிடிபட்டவர்கள் போராடினார்கள். ஒரு வருடம்,இரு வருடம் அல்ல... ஏழு ஆண்டுகள் நடந்த தொடர் போராட்டம் அது! போர் தொடுத்தவர்கள் தான் அடிக்கடி நிராயுதபாணியாகினர். பிடிபட்ட ஆ.ராசா அவர்களோ “இன்று போய் நாளை வா” என அனுப்பிய அதிசயம் அடிக்கடி நிகழ்ந்தது. போரின் முடிவில் கூட வெற்றி தோல்வியை அறிவிக்க கூட அவர்கள் நேற்று போய் இன்று தான் வந்தனர் என்பது தான் ஆச்சர்யமே! இன்றோ திமுக என்னும் இயக்கத்தை அழிக்க நடந்த போரில் நம்மவர்கள் திமுக தலைமைக்கோ, அல்லது தொண்டர்கள் என்னும் படையணிக்கோ அல்லது தங்களுக்கோ எவ்வித சேதாரமும் இல்லாமல் வெற்றிக்கனியை பறித்துக்கொண்டு வந்து நம் செயல்தலைவர் காலடியில் சமர்பித்து விட்டனர். அதை நம் செயல்தலைவரோ தலைவரிடமுமும், பொதுச்செயலாளரிடமும் பகிர்ந்து கொண்டார்.

பொதுவாக ஒரு போருக்கு பின்னால் அதன் வெற்றிக்கு பின்னாள் போர் செய்த அந்த வெற்றி வீரருக்கு மன்னர் பரிசளிப்பது வழக்கம் தானே? அதைத்தான் நம் செயல்தலைவர் அவர்களும் செய்வார் என நம்புகின்றோம் படையணியின் கடைக்கோடி வீரர்கள்!

திமுக என்னும் ஆலமரத்தின் விதை போட்டு அதை செடியாக்கி, மரமாக்கியவர் நம் அண்ணா அவர்கள்! 1949ல் நம் இயக்கத்தை தோற்றுவித்த போது அதற்கு தலைமை பொறுப்பான தலைவர் கிடையாது, பொதுச்செயலாளர் கிடையாது, பொருளாளர் கிடையாது. ஒரு கூட்டுக்குழு தான் அனைத்து பொறுப்புகளையும் கவனித்து வந்தது. அதன் பின்னர் இயக்கம் வளர்ந்து வளர்ந்து வரும் போது அதாவது மூன்றாண்டுகளில் 1952ல் அந்த கூட்டுக்குழு மட்டுமே சமாளித்து விட முடியாது என்னும் நிலை வந்தது. அப்போது தான் அண்ணா அவர்கள் பொதுச்செயலாளர் ஆனார். அப்போது நெடுஞ்செழியன், ஈ.வி.கே சம்பத் ஆகியோர் தலைமை நிலைய செயலர்கள் ஆனார்கள். கவனிக்க... அப்போது துணைப்பொது செயலாளர் என்னும் பதவி திமுகவில் இல்லை. தலைவர் பதவி என்பதை அண்ணா அவர்கள் “பெரியாருக்காக” காலியாக வைத்திருந்தார். அந்த 1952ல் தான் திராவிட முன்னேற்ற கழகம் என்னும் அந்த மாபெரும் இயக்கத்துக்கு கும்பகோணத்தை சேர்ந்த திரு. குடந்தை கே.கே.நீலமேகம் அவர்கள் முதன் முதலாக பொருளாளர் ஆனார்கள். அப்போது திமுகவுக்கென்று சொத்துகள் கிடையாது. “பொருள்” அவ்வளவாக கிடையாது. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் காலணா தான் கட்சியின் பொருள். அதற்கு கூட அப்போதிருந்தே திமுக தன் வரவு செலவுகளை துல்லியமாக வைத்திருந்தது. ஆக அப்படி முதல் பொருளாளர் ஆனவர் தான் குடந்தை கே.கே.நீலமேகம் அவர்கள். அப்போது அவருக்கு அண்ணா அவர்களுக்கு சமமான வயது தான் இருக்கும்!  அதாவது 40 பிளஸ் தான்! ஆக நம் இயக்கத்தில் ஒரு பொறுப்புக்கு வர வேண்டும் எனில் வயது என்பது ஒரு பொருட்டல்ல. உழைப்பும் தியாகமும் தான் பொறுப்புக்கு தகுதி என்னும் நிலை தான் அப்போது முதலே!

அதன் பின்னர் வருடம் ஆக ஆக, இயக்க பொறுப்புகள் பலருக்கு வருகின்றது. அது போலவே அண்ணா அவர்கள் காலத்திலேயே நம் தலைவர் அவர்களுக்கும் “பொருளாளர்” பொறுப்பும் வருகின்றது. தலைவர் அவர்கள் பெயரிலேயே “நிதி” வைத்திருப்பவர் அல்லவா? அதனால் திமுக என்னும் இயக்கத்துக்கு ஆங்காங்கே கட்சி அலுவலகங்கள் இயக்கத்தின் பெயரால் தொண்டர்களிடம் துண்டேந்தி வாங்கப்படுகின்றது. அது போல தேர்தல் நேரத்தில் நிதி திரட்ட வேண்டுமா? அஞ்சியதே இல்லை இந்த கருணா “நிதி” அவர்கள்! தேர்தல் நேரத்தில் தேர்தல் நிதி வசூல் செய்யும் பொறுப்பு அப்போது பொருளாளர் ஆக இருக்கும் இப்போதைய தலைவர் கலைஞர் அவர்களிடம் இருந்தது. அண்ணா அவர்கள் பத்து லட்சம் இலக்கு என சொன்ன போது அதை 11 லட்சமாக கொண்டு வந்து கொட்டியவர் கலைஞர். அது போல தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்படுகின்றது அண்ணாவால்! அந்த மாபெரும் கூட்டத்தில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்கள் பெயரை அறிவித்துக்கொண்டே வந்த அண்ணா அவர்கள் கடைசியாக “சைதாப்பேட்டை தொகுதி....” என சொல்லிவிட்டு அமைதி காக்க... கூட்டம் ஸ்தம்பித்து போய் நிற்கின்றது. இது வரை கலைஞர் பெயரை சொல்லவில்லை அண்ணா எனும் போது தொண்டர்களுக்கோ குழப்பம். ஏனனில் அப்போதே கலைஞர் அவர்கள் சட்ட மன்றத்துக்கு பத்து வருட சீனியர். ஆமாம் 1957ல் குளித்தலை, 1962ல் தஞ்சை என வெற்றி பெற்றவர். அண்ணா கூட்டத்தினரின் ஆரவாரத்தை அதிகப்படுத்தி “சைதாப்பேட்டை தொகுதியில் நிற்பவர் மிஸ்டர் 11 லட்சம்” என அறிவித்தார்! இது தான் ஒரு பொருளாளர் அவர்களுக்கு அழகு!  பொருளாளராக தலைவர் கலைஞர் அவர்கள் சிறப்பாக செயல்பட்டமைக்காக அண்ணாவால் கொடுக்கப்பட்ட பரிசு தான் அந்த “மிஸ்டர் 11 லட்சம்” என்னும் பட்டம்!

அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த அந்த பொருளாளர் பதவி என்பதை அண்ணாவின் மறைவுக்கு பின்னர் இயக்கத்துக்கு புதிய பொறுப்புகள் அமைக்கப்பட்டு கலைஞர் அவர்கள் தலைவர் பதவிக்கு வருகின்றார். அப்போது பொருளாளர் ஆனவர் தான் எம் ஜி ஆர். எம் ஜி ஆரை பொருளாளர் ஆக்கியவர் தலைவர் கலைஞர். 1969ல். பொருளாளர் பதவி என்பது நம் இயக்கத்தில் மிகவும் நம்பிக்கைக்குரிய பதவியாகும். பின்னாளில் அதே எம் ஜி ஆர் “கணக்கு கேட்டு”  இயக்கத்தை உடைத்து துரோகம் செய்து விட்டு போனவர் என்பதை நாடே அறியும். “கணக்கு சொல்ல வேண்டிய இடத்தில்” இருந்த எம் ஜி ஆர் அவர்களே “கணக்கு கேட்ட” விந்தை எல்லாம் ஏன் நடந்தது எனில் எம் ஜி ஆர் போன்ற நம்பிக்கையில்லா ஆட்கள் அந்த பதவிக்கு வந்தமைதான் காரணம்!

அதன் பின்னர் சில பல மாற்றங்கள் ஆன பின்னர்  பிற்காலத்தில் அண்ணன் சாதிக்பாட்சா பொருளாளர் ஆனார். அவர் மறைவுக்கு பின்னர் அண்ணன் ஆற்காடு வீராசாமி அவர்கள் பொருளாளர் ஆனார். அவரது வயோதிகத்தின் காரணமாக பின்னர்  அப்போது துணைப்பொதுச்செயலாளர் ஆக பொறுப்பு வகித்த நம் செயல்தலைவர் அவர்கள் பொருளாளர் பொறுப்புக்கு வந்தார்! அதன் பின்னர் பொருளாளர் பொறுப்பில் இருக்கும் போதே நம் தலைவர் அவர்களின் வயோதிகத்தின் காரணமாக நம் இயக்க தொண்டர்கள் விருப்பத்தாலும், அனைத்து பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களின் நீண்ட நாள் வற்புறுத்தல் காரணமாகவும், மிக மிக முக்கியமாக தன் 14 வயது முதல் கழக கொடி பிடித்து மிசாவில் அடிபட்டு ரத்தம் சிந்தி, இளைஞர் அணியை தொடங்கி இயக்கத்தில் புதுரத்தம் பாய்ச்சி, வைக்கோ போன்றவர்கள் பிரிந்த பின்னரும் இயக்கத்தை கட்டுக்கோப்பாக நடத்தி வந்த தகுதியின் அடிப்படையில் நம் செயல்தலைவருக்கு அந்த பொறுப்பை வழங்கி மகிழ்ந்தார் தலைவர். அன்றைக்கே பொருளாளர் பொறுப்பை மற்ற யாருக்காவது தலைவர் ஒதுக்கி தந்திருக்கலாம். ஆனால் தலைவர் கலைஞர் அவர்கள் காலம் கனியட்டும் என காத்திருந்தார்.

இன்றைக்கு தான் அந்த காலம்  “கனி”ந்துள்ளது என நம் செயல்தலைவர் அவர்களும் உணர்ந்திருப்பார்கள். கடந்த பத்து நாட்களாகவே இந்த 2 ஜி வழக்கின் தீர்ப்பு தேதி குறித்த பின்னரே திருமதி கனிமொழி அவர்களுக்கு பெரிய வரலாறு கொண்ட திமுகவின் பொருளாளர் பொறுப்பை கொடுக்கலாமா என்பது பற்றிய ஹேஷ்யங்கள் இறக்கை கட்டி பறக்க ஆரம்பித்தன. பேராசிரியரும், செயல்தலைவரும் சாதாரணமாக சந்தித்தால் கூட இது பற்றிய பேச்சுகள் தான் நடந்தன என புலனாய்வு பத்திரிக்கைகள் எழுதின. சமூக வலைத்தளங்களில் இயக்கத்தினர் உள்ளேயே ஒரு சிலர் இது பற்றி எழுதுவதும், அதற்கு பதில் சொல்லும் விதமாக சண்டை நடப்பதும் நடந்து கொண்டுள்ளதை பார்க்க முடிகின்றது. நல்ல விபரமான ஒரு  முகநூல் கட்டுரையாள நண்பர் ஒருவர்  கூட “கனிமொழிக்கு பொருளாளர் பதவிக்கான தகுதி இருக்கின்றதா எனில் கண்டிப்பாக ஆம் என்பேன். ஆனால் தவிர்க்க வேண்டும் என்பேன். காலம் கனியட்டும் என்பேன்” என முத்தாய்ப்பு வைத்தார்.

ஆக கனிமொழி அவர்களுக்கு பொருளாளர் பதவி கொடுத்து அவரது தியாகத்துக்கும்,  உழைப்புக்கும் மரியாதை செய்வது என்பது குறித்து கிட்டத்தட்ட எல்லோருக்குமே ஆர்வம் உள்ளது என்பது புலனாகின்றது. ஆக கனிமொழி அவர்களுக்கான வயது தான் அவர்களுக்கு ஒரு காரணமாக இருக்கின்றது எனில் முதல் பொருளாளர் திரு. கே.கே.நீலமேகம் அவர்கள் அந்த பதவிக்கு வந்த போது அவருக்கு ஆன வயதை விட திருமதி கனிமொழி அவர்களுக்கு சற்று கூடுதலாகத்தான் ஆகின்றது. 1969ல் பிறந்த அவர் இதோ இன்னும் 15 நாட்களில் ஜனவரி 5ம் தேதி 2018 அன்று தன் 49 வயதை எட்டுகின்றார். தியாகத்துக்கும் எவ்வித குறைவும் வைக்கவில்லை. தனக்கு கொடுக்கப்பட்ட மாநிலங்கள் அவை உறுப்பினர் பதவியிலும் திமுக என்னும் இயக்கத்துக்கு மிகுந்த பெயரை பெற்றுத்தந்துள்ளார். இயக்க  தேர்தல் பரப்புரைகள், தனக்கு இயக்கத்தில் கொடுக்கப்பட்ட மகளிர் அணி பொறுப்பு என எதிலும் அவர் தன் திறமையை காட்ட தவறியது இல்லை. தொண்டர்களிடம் பாசமாக பழகும் இயல்பு கொண்டவர்.இந்திய தலைவர்கள் எல்லோரிடமும் அறிமுக பழக்கம் ஆனவர்.  எல்லாவற்றுக்கும் மேலாக நம் செயல்தலைவர் அவர்கள் ஒரு கோடிட்டால் அந்த கோட்டின் மீது மட்டுமே நடக்கும் குணம் கொண்டவர். தலைமைக்கு நம்பிக்கைக்கு பாத்திரமானவர். இவர் மீது இதுவரை சொல்லப்பட்ட சொத்தை வாதம் 2 ஜி வழக்கு என்பதும் இப்போது தீயிலிட்ட சருகாகிவிட்டது. ஆகவே திருமதி கனிமொழி அவர்களுக்கு திராவிட முன்னேற்ற கழகத்தின் “பொருளாளர்” பொறுப்பை கொடுப்பதற்கு இதுவே சரியான தருணம்! அப்படி கொடுக்கும் பட்சத்தில் அந்த இனிய செய்தி தலைவர் கலைஞர் அவர்கள் உடல்நிலையில் கூட யாரும் எதிர்பாராத அதீத முன்னேற்றத்தை கொடுக்கும் என்பதில் ஐயமேதுமில்லை! 

திமுகவை அழிக்க நினைத்து ஆதிக்க சக்திகளை எதிர்த்து போரிட்டு வென்றமைக்கான பரிசாக நம் செயல்தலைவர் இதை அறிவிக்கலாமே!

இது  ஒரு சாதாரண கடைக்கோடி தொண்டன் செயல்தலைவர் தளபதி அவர்களுக்கு வைக்கும்  கோரிக்கை மட்டுமே என்பதையும் மற்றவர்கள் உணர்க!

November 10, 2017

“ஆறுகளை பிடுங்கி விற்கும் இந்தியா” - நூலின் மீதான என் பார்வை!பெயரை கேட்டாலே ஒரு வித பயம் வந்து அடிவயிற்றில் பிசைகின்றதா? ஆமாம். அது ஒரு சின்ன நூல் தான். மொத்தம் 46 பக்கங்கள் தான் அந்த நூல். பொதுவாக 46 பக்கங்கள் கொண்ட ஒரு அச்சு பிரதியை “கையேடு” என சொல்வதே வழமை. ஆனாலும் நான் அதை “நூல்” என சொல்கின்றேனெனில் அதன் உள்ளீடு அத்தகையது. எழுதியவர் மீது “தேச துரோக குற்றம்” சுமத்தி வழக்கு பதியவைக்கும் அளவுக்கு அந்த 46 பக்கங்களில் விஷயம் இருக்கின்றது எனில் அது “நூல்” வகையறாக்களை சார்ந்தது என்பதே என் கருத்து!


பொதுவாக எல்லோரும் ஆறுகள், தண்ணீர் வராமை, வறட்சி, வட நாட்டில் வெள்ளம் போன்ற செய்திகள் வரும் போதெல்லாம் முனுமுனுக்கும் வார்த்தைகள் “கங்கையும் காவிரியையும் இணைக்க வேண்டும். அக்கே தண்ணீர் வெள்ளமாக போகின்றது, இங்கே காவிரி உள்ளிட்ட தென்னக ஆறுகள் காய்ந்து கிடக்கின்றன, ஆகையால் அவைகளை இணைக்க வேண்டும்” என்பதாகவே இருக்கும். போதாக்குறைக்கு பாரதியார் வேறு பாட்டெல்லாம் பாடி விட்டு போய்விட்டார் எனும்போது இந்தியாவின் வடக்கில் ஓடும் ஆறுகளை தெற்கில் இருக்கும் ஆறுகளோடு இணைக்க வேண்டும் என்னும் எண்ணம் நம் மனதில் பசுமரத்து ஆணியாக பதிந்து விட்டது என்பதே உண்மை. நிலைமை இப்படி இருக்க திடீரென்று ஒரு கலகக்குரல் “நதிகளை இணைக்க வேண்டாம்” என எழுந்தால் நாம் முதலில் அதை புறந்தள்ளுவோம். பின்னர் பரிகசிப்போம், ஏளனம் செய்வோம், கோபப்படுவோம் உச்சகட்டமாக “அந்த கலகக்காரனை புடிச்சு உள்ள போடுங்க போலீஸ்கார்” என வீரவசனம் பேசுவோம். யாராவது ஒருவராவது “அந்த கலகக்காரர் நதிகளை இணைப்பதை ஏன் எதிர்க்கின்றார்” என்பது பற்றி அவருடைய கருத்தை கேட்டோமா எனில் இல்லை என்பதே உண்மை.


ஜப்பான் வாட்டர் ட்ரீட்மெண்ட் என்கிற ஒரு விஷயம் உண்டு. காலை வழக்கமாக ஒருவர் எழுந்திருக்கும் நேரத்தின் ஒரு மணி நேரம் முன்பாக அலாரம் வைத்து எழுந்து 3 லிட்டர் குளிர்நீர் குடிக்க வேண்டும். அதற்கு முன்னர் பல்துலக்குவது என்பது கூடாது. இது ஒரு ட்ரீட்மெண்ட். அத்தனையே. முடிந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். இல்லாவிடில் புறந்தள்ளிவிட்டு போய்க்கொண்டே இருங்கள். அவ்வளவு தான் விஷயம்! அதே போலத்தான் இந்த புத்தகமும். அதன் உள்ளே இருக்கும் விஷயம் என்ன என்றே தெரிந்து கொள்ளாமல், தெரிந்து கொள்ள முயலவும் இல்லாமல் அதை பரிகசிப்பதும், எதிர்பதும் அத்தனை ஒரு உத்தமமான செயல் அல்ல!அது போலவே எந்த கருத்தாக இருந்தாலும் முதலில் கேளுங்கள்! சாத்தியமா, சாத்தியப்பட்டால் பலன் கொடுக்குமா என்பதை பகுத்தறிந்து பின்னர் பரிகசிக்கவோ அல்லது எதிர்கவோ செய்யுங்கள் என்பதே என் வாதம்!


நதிகளை இணைக்க வேண்டும் என்னும் விஷயம் நம் குழந்தை பருவத்தில் இருந்து மந்திர சொல் போல மனதில் பதிந்து விட்டது. அதை இந்த 30 ரூபாய் நூல் கொண்டு அத்தனை சுலபமாக அழித்து விட இயலுமா எனில்.... இயலும் தான் போலிருக்கின்றது. காரணம் அதற்கான முகாந்திரம் இருப்பதால் தான் அரசு எழுதிய நூலாசிரியர் மீது “தேச துரோக வழக்கு” தொடுத்துள்ளது. இதே திராவிட முன்னேற்ற கழகம் சார்ந்த மாநில செய்தி தொடர்பு செயலர் திரு. கே.எஸ். ராதாகிருஷ்ணன் அவர்கள் நதிகளை இணைக்க வேண்டி பல சட்ட வழி போராட்டங்களை தனிப்பட்ட முறையில் செய்து வருகின்றார் பல ஆண்டுகளாக! உச்சநீதி மன்றம் வரை நடையாய் நடந்து ஒரு சில தீர்ப்புகளையும் பெற்று விட்டார். அவரது இலக்கு என்பதும் தமிழக விவசாய நலன் தான் முடிவுப்புள்ளி. அதே போல இந்த நூலின் ஆசிரியர் பேராசிரியர் ஜெயராமன் அவர்களின் இலக்கும் அதே தமிழக விவசாய நலன் தான். வழிகள் தேன் வேறு வேறு. ஆனால் இலக்கு என்பது ஒன்றே ஒன்று “விவசாய நலன்”. ஆக பேராசிரியர் ஜெயராமன் இந்த நூல் வழியாக எந்த விதமான தேச துரோகத்தை செய்து விட்டார் என்பது தான் புரியவில்லை. அனேகமாக வழக்கை தொடர்ந்த அரசுக்கும் புரியாது என்றே நினைக்கின்றேன். வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் போது அது பற்றி பேசிக்கொள்வோம். இப்போது நூலின் கருத்துக்கு வரலாம்!


நதிகள் இணைப்பு எனில் நம் மனதில் ஓடும் பிம்பம் என்பது கங்கை முதல் காவிரி வரை வாய்க்கால் வெட்டி அதன் வழியே தண்ணீரை கொண்டு வருவது. அது பாய்ந்து அடித்து நுரை பொங்க உத்தபிரதேசத்தில் இருந்து மத்திய பிரதேசம் வந்து அந்த மாநிலத்தை வளம் பெற செய்து, அங்கிருந்து ஆந்திரா, கர்நாடகா என வரும் வழி முழுமையும் வளமாக்கி பின்னர் தமிழகம் வந்து தமிழக அனைத்து மாவட்டம் வழியாக பாய்ந்து ஓடி வளமாக்கி... இத்யாதி... இத்யாதி... இப்படித்தானே கற்பனையில் இருக்கின்றோம்... ஆனால் இந்த நூலில் ஆசிரியர் அவர்கள் அதில் தான் தன் முதல் சந்தேகத்தை தெளிவாக தெளிக்கின்றார்.


இந்திய நதிகளை இணைக்க ஆகும் செலவு, அதற்கான கால அவகாசம், அந்த கால அவகாசம் முடியும் போது குறிப்பிட்ட அந்த செலவு எத்தனை அதிகமாகும் என்பதில் ஆரம்பித்து தொடர்கின்றார். அரசு மதிப்பில் 20 லட்சம் கோடி ஆகும். அது கால்வாய் வெட்டி முடிக்கும் போது 30 லட்சம் கோடியை தொடும் என அரசு சொன்னதை எடுத்து இயம்புகின்றார். இந்த பணத்துக்கு அரசு எங்கே போகும் என வினா எழுப்புகின்றார். அங்கே தான் முதல் இடி விழுகின்றது அவருக்கும் நமக்கும்! அதாவது அரசு அந்த பணத்தை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கார்ப்பரேட் கம்பனிகள் மற்றும் உலக வங்கிகள், அயல்நாட்டு வங்கிகள் வழியாக மூலதனமாக பெறும். சும்மா வருவாளா சுந்தரி?


சுமார் இருபது வருடங்கள் முன்பாக இந்திய  தேசிய நெடுஞ்சாலைகள் எப்படி இருந்தன? இப்போது எப்படி இருக்கின்றன. தங்க நாற்கர சாலைகள் இந்தியா முழுமையும் நான்கு வழி சாலைகளாக போடப்பட்டுள்ளதே? அது போது மாநில நெடுஞ்சாலைகள் கூட போடப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் நிதி எங்கிருந்து வந்தது? இவற்றில் பல கிலோமீட்டர் சாலைகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் சாலை போட்டு மத்திய, மாநில அரசுகளுக்கு கொடுத்து விட்டு சுங்க வரி வசூலித்து அதை எடுத்துக் கொள்கின்றனர். சாலை போடுவதற்கும், அதை பராமரிக்கவும் சாலையில் செல்லும் இரு சக்கர, மூன்று சக்கர, நான்கு சக்கர மற்றும் கனரக வாகனங்கள் எல்லாமே சாலை வரி கட்டுகின்றோம். ஆனாலும் இந்த தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட சாலைகளுக்கு தனியாக ஒவ்வொறு பயணத்தின் போதும் சுங்க வரி (டோல்கேட்) கட்டுகின்றோம். அதே போல இந்திய கார்ப்பரேட் கம்பனிகள், வெளிநாட்டு கார்ப்பரேட் கம்பனிகள் எல்லோரும் நதிகளை இணைக்க முன்வரும் போது அந்த நதிகளை தங்கள் வசம் வைத்துக் கொண்டு என்ன செய்வார்கள்? சாலை போட்டால் அதில் பயணிக்கும் வாகனங்களில் இருந்து சுங்க வரி வசூலிக்கலாம். அதுவே நதி எனில் என்ன செய்வார்கள்? யார் யாருக்கு தண்ணீர் தருகின்றார்களோ அவர்களிடம் மீட்டர் போட்டு காசு வசூலிப்பார்கள். ஆனால் இப்போது காவிரியில் தண்ணீர் வருகின்றது எனில் விவசாயிகளுக்கு இலவசமாக தண்ணீர் வரும். தண்ணீர் இலவசம் என்பதால் அந்த விவசாயி தான் விதைக்காகவும், உரம், பூச்சி மருந்துகள், விவசாய கூலி போன்ற செலவுகள் போக தனக்கான லாபம் வைத்து ஒரு குறிப்பிட்ட விலைக்கு அந்த விளைச்சலை விற்க இயலும். அதுவே கார்ப்பரேட் கம்பனிகளிடம் இருந்து முக்கிய மூலதனமான தண்ணீரை விலை கொடுத்து வாங்கினால் என்ன ஆகும்? விற்பனை செலவு பன்மடங்காக உயரும். கொள்முதல் இடத்திலேயே விலை உயர்வு எனில் கடைசியாக அது தரகர்கள் வழி பயணித்து பயனாளிக்கு வரும் போது அந்த விளைச்சலின் விலை என்பது இப்போது இருப்பதை விட மும்மடங்கு அதிகரிக்கும் அபாயம் உள்ளது என்பதை தான் நூலாசிரியர் தன் சந்தேகமாக சொல்கின்றார்.  அவர் தெளிவாக இப்போதைக்கு 30 லட்சம் கோடி ரூபாய் இந்திய அரசோ அல்லது அந்த நதி பாய்ந்து வரும் மாநில அரசுகளோ இந்த செலவை செய்ய முடியாது அதனால் வேறு வழியில்லாமல் உலக மற்றும் இந்திய கார்ப்பரேட் கம்பனிகளுக்கு ஆறுகளை விற்பதை தவிர வேறு வழி இல்லை என்கிறார்.

மேலும் அந்த கார்ப்பரேட் கம்பனிகள் விவசாயத்துக்கு கொடுப்பதை விட தொழிற்சாலைகளுக்கு அதுவும் கார்ப்பரேட் கம்பனிகளுக்கு தான் முன்னுரிமை தருவார்கள் என்றும் ஐயுறுகின்றார். அவரது அச்சத்திலும் ஒரு உண்மை இருக்கத்தான் செய்கின்றது. மறுப்பதற்கில்லையே! இதோ தாமிரபரணியை உறிஞ்சி எடுத்து பெப்சி தயாரிப்பதை நாம் கண் முன் பார்த்துக்கொண்டுதானே இருக்கின்றோம். இப்படி நதிகள் இணைப்பால், காசு கொடுத்தால் கார்ப்பரேட் கம்பனிகளில் இருந்து தண்ணீர் கிடைக்கும் என அறிந்தால் அகில உலகுக்கும் இந்த செயற்கை குளிர்பான கம்பனிகள் ஒட்டு மொத்த உற்பத்தி இடமாக இந்தியாவைத்தானே தேர்வு செய்யும். அப்படி செய்யும் போது “ஆகா நமக்கு ஏற்றுமதி வரி கிடைக்கின்றது. நாம் வல்லரசு ஆகலாம்” என அரசியல்வாதிகள் சப்பை கட்டு கட்டுவார்கள். அந்த நதிகளின் புதிய கார்ப்பரேட் முதலாளிகள் விவசாயி தண்ணீருக்கு கொடுக்கும் காசை விட கொஞ்சம் தூக்கலாக கொடுக்கும் தொழிற்சாலை முதலாளிகளுக்கு தானே முன்னுரிமை கொடுப்பார்கள். ஆக விவசாயம் படுத்து விடும். இந்தியா முழுமையும் நதிகள் இணைந்தாலும் விவசாய நிலம் தரிசாக கிடக்கும். அதை ஏன் தரிசாக போட்டுக்கொண்டு என்று அந்த நிலத்தை கார்ப்பரேட் முதலாளிகளிடம் அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்வான் அந்த ஏழை விவசாயி என அச்சப்படுகின்றார் நூலாசிரியர் பேராசிரியர் ஜெயராமன்.

நதிகள் இணைப்பினால் நடக்கும் முதல் கோணல் இது! அடுத்தது “சாத்தியமின்மை” பற்றி அந்த நூலில் விரிவாக சொல்கின்றார். உலகில் எங்கெங்கு நதிகள் இணைக்கப்பட்டுள்ளன. அதில் எத்தனை சாத்தியமானது. அப்படி சாத்தியமானதற்கு காரணம் என்ன? அப்படியே இணைத்த பின்னர் அந்த திட்டம் தோல்வியில் முடிந்த வரலாறுகள் எல்லாம் விரிவாக அந்த நூலில் குறிப்பிடுகின்றார். உதாரணத்துக்கு  “சீனாவில் வடக்கு - தெற்கு நீர் மாற்றும் திட்டம்”. இதில் திட்டம் சாத்தியமானதற்கு காரணம் சீனா முழுமையும் ஒரே மொழி, ஒரே இனம், ஒரே கலாச்சாரம் என்பதால் இணைப்பு சாத்தியம் ஆனது. ஆனால் மிகப்பெரிய பலனை தரவில்லை என்கிறார் ஆசிரியர். 80 பில்லியன் டாலர் செலவில் 2002ல் தொடங்கி அந்த திட்டம் நிறைவேற்றப்பட்டது. 3,30,000 மக்கள் தங்கள் குடியிருப்புகளை இழந்தனர். 45 பில்லியன் கனமீட்டர் நீர் தெற்கில் இருந்து வடக்கே மஞ்சள் ஆறுக்கு கொண்டு செல்லப்பட்டும் முழுமையான பலன் தரவில்லை என்கிறார் ஆசிரியர். (பலன் தரவில்லை என்று ஒரு வரியில் முடித்து விட்டார் தவிர எப்படி பலன் தரவில்லை என விளக்கவில்லை என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும். 45 பில்லியன் கன மீட்டர் மடைமாற்றம் செய்யப்பட்டும் பலன் இல்லை என்பது என்னளவில் ஏற்றுக்கொள்ள இயலவில்லை) ஆனால் அதே நேரம் 3,30,000 குடியிருப்புகள் இழப்பு என்பது ஒரு வரலாற்று சோகம் என்பதை மறுப்பதற்கில்லை.

அடுத்து ஸ்பெயின் நாட்டில் டாகுஸ் - சேகுரா நீர் மாற்றம் திட்டம்! இது 1978ல் நிறைவேறிய திட்டம் இது. இதில் நான்கு ஆறுகள் இணைக்கப்பட்டன. டாகுஸ், ஜூகார்,சேகுரா, குவாடியானா ஆகிய ஆறுகள் இணைக்கப்பட்டதால் 1.7 லட்சம் ஹெக்டேர் நில பாசனம், தவிர 78 நகராட்சிகளுக்கு குடிநீர் என கோலாகலமாக நடந்தது. ஆனால் நாள்பட நாள்பட டாகுஸ் ஆற்றில் நீர் வற்றி அங்கிருந்த மீன் வகைகள் அழிந்து மேலும் நிலையான தண்ணீர் இல்லாமல் அத்திட்டம் தோல்வி என்கிறார் ஆசிரியர்.ஆனால் அது ஒற்றை கலாச்சாரம், மொழி என்பதால் இணைப்பு என்பது சாத்தியம் ஆனது என தெளிவு படுத்துகின்றார்.  இதே போல தென் ஆப்பிரிக்காவில் லெசோதா பீடபூமி நீர்த்திட்டம் 1950ல் ஆரம்பிக்கப்பட்டு 36 வருடங்கள் கழித்து அந்த திட்டம் முடிந்தது. அதுவும் ஒரே தேசிய இனத்தின் உள்ளேயே நடந்த இணைப்பு என்பதால் சாத்தியம் ஆனதாக சொல்கின்றார் ஆசிரியர். ஆனால் பல தேசிய இனங்கள் கொண்ட இந்தியாவில் நதிகள் இணைப்பு என்பது சாத்தியம் இல்லை என்பதில் நூலாசிரியர் உறுதியாக இருக்கின்றார். காரணம் அவர் ஏற்கனவே இங்கு பார்த்து கொண்டிருக்கும் சண்டைகள்!

ஆனால் நூலாசிரியர் ஒத்துக்கொண்ட ஒரு நதிநீர் இணைப்பு என்பது இந்தியாவின் உள்ளே கிருஷ்ணா - கோதாவரி இணைப்பு என்றே நினைக்கின்றேன். இந்த ஆறுகள் விஜயவாடா அருகே இணைக்கப்பட்டது. அந்த ஆறுகள் ஒரே தேசிய இனமான தெலுங்கு பேசும் மக்கள், ஒரே கலாச்சார மக்கள் போன்ற காரணங்களால் சாத்தியம் ஆனது என்பதை ஆசிரியர் விளக்குகின்றார். அதனால் 1 லட்சம் ஏக்கர் பாசனம் பெறுவதையும் ஆசிரியர் சொல்லி விட்டு இதை கருத்தில் கொண்டு அனைத்து ஆறுகளையும் இணைத்து விடலாம் என நினைக்கக்கூடாது என்கிறார்... அதற்கான காரணத்தையும் சொல்கின்றார்.  இதோ அவர் சொல்லும் உதாரணம் தெலுங்கு கங்கா திட்டம். கிருஷ்ணா நிதியை சென்னை ஸ்ரீசைலம் அணையில் இருந்து 406 கிமீ தூரம் கால்வாய் அமைத்து பூண்டி நீர்த்தேக்கம் கொண்டு வந்து சென்னை மக்கள் குடிநீர் தேவை பூர்த்தி செய்வது என்பது திட்டம். ஆந்திரா என்பது வேறு மொழி, தமிழ் வேறு தேசிய இனம் என்கிறார் ஆசிரியர். இதில் எனக்கு உடன்பாடில்லை. இருவருமே திராவிடம் என்னும் ஒரே இனம் தான். மொழி தான் வேறு என்பது என் கருத்து. ஆனால் நூலாசிரியர் பேராசிரியர் ஜெயராமன் அவர்கள் அடிப்படையில் ஒரு தமிழ்தேசியவாதி என்பதால் எனக்கு இக்கருத்தில் உடன்பாடில்லை என்பினும் அவர் சொல்ல வந்த கருத்தை சொல்கிறேன். அதாவது இந்த திட்டம் 1977ல் தமிழ்நாட்டுக்கும், கிருஷ்ணா நதி நீர் பயன்பாட்டாளர்களான மகாராஷ்டிரம், கர்நாடகம், ஆந்திரா ஆகிய நான்கு மாநிலம் சேர்ந்து கையெழுத்தானது. அதன் படி மற்ற மூன்று மாநிலமும் மாநிலத்துக்கு 5 டி எம் சி தண்ணீர் என சேர்த்து 15 டி எம் சி தண்ணீர் தமிழகத்துக்கு தர வேண்டும். ஒரு வழியாக திட்டம் 1996ல் தான் நிறைவேறியது. அதற்கு எம் ஜி ஆர் அரசும் (அன்னை இந்திரா, என் டி ஆர் முன்னிலையில் அப்போது எம் ஜி ஆர் 30 கோடி ரூபாய் காசோலையை ஒரு சந்தன பேழையில் வைத்து பொதுமக்கள் முன்னிலையில் முன்பணமாக கொடுத்தார்) கலைஞர் அரசும், பின்னர் ஜெயலலிதா அரசும் மாறி மாறி வகை தொகையில்லாமல் பணம் கொடுத்து கொடுத்து அந்த கால்வாய் 1991- 1995ல் மிக தாமதமாக கிடப்பில் போடப்பட்டும், மெதுவாக நடந்தும் ஒரு வழியாக திமுகவின் ஆட்சி காலத்தில் 1996ல் செப்டம்பர் 26ல்  கலைஞர் ஒரு பொதுமேடையில் சந்திரபாபு நாயுடுவிடம் இருந்து ஒரு குடம் தண்ணீர் பெற்றார். மொத்தம் சுமார் 700 கோடியில் முடிய வேண்டிய திட்டம் 2013 வரை சுமார் 4000 கோடியை தாண்டி விழுங்கி விட்டது.

இதோ இப்போது சமீபத்தில் ஜெயலலிதா மறைந்த உடன் ஓ.பன்னீர்செல்வம் குறுகிய காலம் முதல்வராக இருந்த போது அவர் ஓடிச்சென்று ஆந்திர முதல்வரிடம் கேட்டாராம். அவரும் தண்ணீர் கொடுத்தாராம் என எல்லா பத்திரிக்கையிலும் மாய்ந்து மாய்ந்து எழுதினார்களே... அதன் பின்புலத்தை விளக்குகின்றார் நூலாசிரியர் பேராசிரியர் ஜெயராமன் அவர்கள். அங்கே தண்ணீர் கேட்க சென்ற தமிழக முதல்வரிடம் ஆந்திர முதல்வர் கேட்ட தொகை 443 கோடி. உடனே ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் ஒரு பகுதி பணத்தை கொடுப்பதாக ஒத்துக் கொண்டு தண்ணீர் பெற்றார். மேலும் சந்திரபாபு நாயுடு அவர்கள் தமிழக பள்ளிகளில் தெலுங்கு மொழி தொடர வேண்டும் என கேட்டமைக்கும் தமிழக முதல்வர் தலையை ஆட்டிக்கொண்டு வந்தார். அப்படி இருந்தும் ஒப்பந்தப்படி 15 டி எம் சி தண்ணீர் இது வரை வந்தது இல்லை. ஓ.பன்னீர் செல்வம் 2 டி எம் சி வேண்டும் என கேட்க அதற்கு சந்திரபாபு நாயுடு தான் ஏற்கனவே 1 டி எம் சி தந்து விட்டதாகவும் மீதியை தருவதாகவும் சொன்னார். (2007ல் திமுக ஆட்சியில் அதிகபட்சமாக 4 டி எம் சி வந்தது. 2013ல் 2 டி எம் சி வந்தது. மற்ற படி அதிமுக ஆட்சியில் நீர் வரவே இல்லை. இது தான் நடந்தது. 

ஆக வேறு வேறு மொழிகள் ஆட்சி செய்யும் மாநிலங்கள் வழியாக நதி நீர் இணைப்பு என்பது எப்படி சாத்தியமில்லை என்பதற்கு மேற்படி உதாரணத்தை தருகின்றார் ஆசிரியர். ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும் அவர் சொல்வதை! ஆக ஒரு மாநிலத்துக்கும் அடுத்த மாநிலத்துக்குமே நதி நீர் இணைப்பில் நீர் பெறும் மாநிலம் இத்தனை கோடி கொடுத்து தான் போராடி நீர் வாங்கும் நிலை. இதிலே கார்ப்பரேட் கம்பனிகளுக்கு நதிகளை தாரை வார்த்து விட்டு அவர்களிடம் காசு கொடுத்து விவசாயிகள் வாங்க வேண்டிய நிலை வந்தால் என்ன ஆகும் என்பது தான் நூலாசிரியரின் ஆதங்கம்!

அடுத்து ஆசிரியர் நதிநீர் இணைப்பால் நிகழும் சுற்றுச்சூழல் சீர்கேடு பற்றி அதிகமாக கோபப்படுவதை இந்த நூலில் நாம் எங்கும் பார்க்க நேரிடுகின்றது. ஆறுகள் வீணாக கடலில் கலக்கின்றது என்பதை ஆசிரியர் சரி தான் என்பது தான் எனக்கு ஒத்துக்கொள்ள இயலவில்லை. அவர் அதாவது அவர் எனில் அவரில்லை... பல சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நதிகள் கடலில் கலக்காமல் போவதால் கடலின் உப்புத்தன்மை அதிகரிக்கும். அதனால் கடல்வாழ் உயிரினங்கள் அழியும் என ஒரு வாதம் வைக்கின்றார்கள். கடலில் கலக்கும் ஆறுகள் என்னைப்பொறுத்தவரை கடலில் கரைக்கும் பெருங்காயம் போலத்தான். ஆறுகள் வழியே கலக்கும் நன்னீர் கடலின் உப்புத்தன்மையை மிதமாக்கும் என்கிற வாதத்தை என்னால் ஏற்க இயலவில்லை. அது போல ஒரு படுகையில் இருந்து புதிதாக ஒரு கால்வாய் வெட்டி அதன் வழியாக வரும் மீன்கள் புதிய படுகையில் வாழாது அழிந்து விடும் என சொல்வதையும் என்னால் ஏற்க இயலவில்லை. ஏனனில் ஒரு வரை உயிரினம் தான் வாழ தகுதி இல்லை தான் போகும் இடம் என அறிந்தால் அங்கு போகாது. உதாரணத்துக்கு காவிரி ஆறு பூம்புகாரில் கடலில் கலக்கின்றது. காவிரியில் விரால், ஆத்து கெண்டை, குறவை போன்ற ஆற்று மீன்கள் வாழும். அவைகள் தவறிக்கூட காவிரி கலக்கும் பூம்புகாரில் அப்படியே கடலுக்கு உப்பு தண்ணீரில் சென்று விடாது. தன் இருப்பிடம் எது என தெரியும் அவைகளுக்கு. அது போல கொள்ளிடம், ராஜா வாய்க்கால் பகுதிகளில் முதலைகள் உண்டு. அந்த ஆறுகள் கடலில் தான் கலக்கின்றன. என்றாவது ஒரு நாள் ஒரு முதலையாவது உப்பு நீருக்கு தவறிப்போய் சேர்ந்து இறந்து மிதந்தது உண்டா? கிடையாது. இயற்கை அந்த சக்தியை அந்த உயிரினங்களுக்கு வழங்கி இருக்கின்றது. அது போல அந்த முகத்துவார பகுதிகளில் மடவாய் மீன் என்று ஒன்று இருக்கும். அந்த மீன்கள் கடலின் உப்பு நீர், ஆற்றின் நன்னீர் ஆகியவை கலக்கும் இடத்தில் இருக்கும். அவைகள் சுத்த உப்பு நீரான ஆழ் கடலுக்கும் செல்லாது. அது போல சுத்தமான நன்னீரான ஆற்றின் மற்ற பகுதிகளுக்கும் வராது. அவைக்ள் நன்னீர்+உப்புநீர் கலக்கும் இடத்தில் மட்டுமே வாழும். இது தான் இயற்கை! அதனால் நூலாசிரியரின் அந்த வாதத்தை நான் ஒத்துக்கொள்ள போவதில்லை.

அதே போல கால்வாய் வெட்டுவதால் அங்கு வாழும் மனிதர்கள் இடம் பெயர வேண்டும் என அவர்களுக்காக பச்சாதாபம் அடைகின்றார் பேராசிரியர் ஜெயராமன். உண்மை தான். ஆனால் தவிர்க்க இயலாதது. அவர் இது விஷயமாக ஆதங்கப்படும் போது “தஞ்சாவூரில் வைரமுத்து பேசும் போது நதிகளை இணைக்க வேண்டும் என புரியாமல் பேசுகின்றார்” என்கிறார். நியாயமாக பார்த்தால் பேராசிரியரின் இந்த விஷயத்துக்காக அதாவது பல லட்சம் மக்கள் குடிபெயர வேண்டும் என்கிற காரணத்துக்காக வேண்டியாவது நதிகள் இணைப்புக்கு  திரு. வைரமுத்து அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். ஏனனில் வைகை அணை கட்டப்பட்ட போது தன் கிராமம் அழிந்ததை அழுது அழுது பேயத்தேவர் என்னும் கதாபாத்திரத்தை கதாநாயகனாக கொண்டு கள்ளிக்காட்டு இதிகாசம் எழுதியவர் தான் திரு. வைரமுத்து அவர்கள். இப்படி நதிகள் இணைக்கும் போது பல கள்ளிக்காட்டு இதிகாசங்கள் பிறக்கும் என்பது மட்டும் சர்வ நிச்சயம்!

மேலும் இந்த நதிகள் இணைப்பு ஏன் சாத்தியமில்லை என்பதற்கு நூலாசிரியர் சொல்லும் இன்னும் ஒரு காரணம்..... சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா ஆகிய நதிகள் பன்னாட்டு நதிகள். அவைகள் சீனா, வங்காள தேசம், பாகிஸ்தான், நேப்பாளம் ஆகியவை சம்பந்தப்பட்ட ஆறுகள். நாம் நம் வசதிக்கு கங்கையை, பிரம்மபுத்திராவை, சிந்து நதியை கால்வாய் வெட்டி தெற்கே கொண்டு வந்து விட முடியாது. அதற்கு மற்ற நாடுகள் அனுமதி வேண்டும். அப்படி அவைகள் அனுமதித்தால் சீனாவும் நாங்களும் எங்கள் பகுதியில் வரும் அந்த ஆறுகளை வெட்டி உள்ளே இழுத்துக் கொள்கிறோம் என உரிமை கோரும். அது போல பாகிஸ்தான், வங்காள தேசம், நேப்பாள் ஆகியவைகள் போர்க்கொடி தூக்கும் அபாயம் இருக்கின்றது என்கிறார் பேராசிரியர் ஜெயராமன் அவர்கள். ஆக இதுவும் சிந்திக்கப்பட வேண்டிய விஷயம் தான்!

சரி வேறு என்ன தான் வழி? ஒரு திட்டம் கொண்டு வ்ந்தால் அதற்கு குறை சொல்லும் கலகக்காரர்கள் தான் இருப்பார்கள். தீர்வு சொல்ல மாட்டார்கள் என சொல்வார்கள். அதாவது ஒரு பழமொழி “கட்டுன வீட்டுக்கு நொட்டை சொல்ல வந்துட்டான்” என்பார்கள். ஆனால் பேராசிரியர் அவர்கள் தீர்வாக ஒரு விஷயம் சொல்லி இருக்கின்றார். தமிழகத்தை பொறுத்தவரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். அது மட்டுமே காவிரிக்கு உரிய நீரை பெற்றுத்தரும்.உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதித்து நடந்தாலே போதும் தமிழகத்துக்கு தேவையான நீர் கிடைத்து விடும் என்கிறார் பேராசிரியர். இப்போது தமிழகத்தில் 84 அணைகள் இருப்பதை ஆசிரியர் குறிப்பிட்டு அதில் நீர் தான் இல்லை என்பதையும் கோடிட்டு காட்டுகின்றார். காவிரி தீர்ப்பாயம் தனது இறுதி தீர்ப்பில் தமிழகத்துக்கு 192 டி எம் சி நீர் தர வேண்டும் என்றது. அது இயற்கைக்கு மாறானது. ஆனால் தமிழக அரசு 250 டி எம் சி வேண்டும் என உச்சநீதிமன்றம் சென்றது. ஆனால் (ஜெயலலிதா ஆட்சியில்) தமிழக வழக்கறிஞர் வாயையே திறக்கவில்லை. ஆக இது போன்ற குளறுபடிகள் தீர்க்கப்பட்டாலே போதும் தமிழகத்துக்கு தேவையான நீர் கிடைக்கும். இயற்கை வளம் அழியாது. யாரும் குடிபெயர வேண்டாம். இது மட்டுமே ஒரே தீர்வு என்கிறார் நூலாசிரியர்.

மேலே நான் சொன்னது எல்லாம் அந்த நூலில் இருந்து மேலோட்டமாக சொன்ன விஷயங்கள் மட்டுமே. அந்த நூலில் இயற்கை ஆர்வலர்கள், பொறியாளர்கள், இந்திய நதிகளை இணைக்க வேண்டி செயல்பட்ட திட்ட பொறியாளர்களின் கூற்றுகள், அப்துல் கலாம் அவர்களின் திட்டம், அது போல இந்தியா முழுமைக்கும் ஆறுகள் வழியே கிடைக்கும் நீர் எவ்வளவு? அதில் வீனாக போவது, ஆவியாதல் போன்றவைகள் போக மீதம் நாம் பயன்படுத்தும் நீரின் அளவு போன்ற பல விஷயங்களை ஆதாரபூர்வமாக விளக்கியுள்ளார்!


இப்போது நதிநீர் இணைப்பை ஆதரிப்போர் நாளையே நதிகள் இணைக்கப்பட்டு, பின்னர் கார்ப்பரேட் ஆசாமிகள் காசுக்கு நீரை விவசாயிக்கு விற்கும் நிலை வந்தால் இப்போது ஆதரிப்பவர்கள் தங்கள் சொத்தை விற்று விவசாயிகளுக்கு பதில் அந்த நீருக்கான காசை கொடுப்பார்களா என கோபமுடன் கேட்கின்றார் நூலாசிரியர்! பதில் தான் இன்னும் வரவில்லை!  என்னைக்கேட்பின், இப்படி ஒரு வராத பதிலை நதிகள் இணைப்புக்கு முட்டு கொடுக்கும் பலரை கேட்பதை விட ஒற்றை சாளர முறையில் அரசாங்கத்திடமே “நதிகளை இணைத்தால் எங்களுக்கு இலவச நதி நீர் எப்போதும் போல வேண்டும். அதில் மாநில உரிமை மறுக்கப்படக்கூடாது, விளை நிலங்களை கார்ப்பரேட் கம்பனிகள் தொழிற்சாலை அமைக்க விற்பனை செய்ய தடை சட்டம் வேண்டும் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றினால் ஆறுகளை இணைக்க ஒப்பந்தம் போட வேண்டும்” என்கிற விஷயங்களை கேட்டு போராடலாமே என்பது தான்!தவிர கார்ப்பரேட் சாமியார்களின் ஆட்டம் நதிகள் இணைப்பு விஷயத்தில் ஜக்கி வாசுதேவ் போன்ற காட்டை அழித்தவர்கள் திடீரென நதிகளை பாதுகாக்கவும், இணைக்கவும் குபீரென புறப்பட்டு மிஸ்டு கால் கொடுக்க சொல்வது எல்லோருக்குமே கொஞ்சம் பயத்தை தான் கூட்டுகின்றது. எலி ஏன் அம்மனமாக ஓடுகின்றது என நினைக்க தோன்றுகின்றது.


நான் மேலே சொன்ன விஷயங்கள் தான் “ஆறுகளை பிடுங்கி விற்கும் இந்தியா” என்கிற பேராசிரியர் ஜெயராமன் அவர்களின் நூல் பற்றிய என் கருத்துகள்!


நிற்க..... இந்த நூலின் ஆசிரியர் அவர்கள் இந்த நூலை எழுதி வெளியிட்டு மூன்று நாட்களில் அவர் மீது தேச துரோக வழக்கு பாய்ந்து விட்டது! அப்படியெனில் எங்கோ இடிக்கின்றதே! ஆக பேராசிரியர் நதிகள் இணைப்பினால் வரப்போகும் தீமைகளை பட்டியலிட்டாரே... அதன் படி தான் நடக்க போகின்றதா? இந்திய அரசு ஆறுகளை கார்ப்பரேட் கம்பனிகளுக்கு விற்கப்போவது  உண்மையா?


இந்த நதிகள் இணைப்பு என்பது என்னளவில் சாத்தியப்படக்கூடியது என்பதும், காசு கொடுத்து கார்ப்பரேட் கம்பனிகளிடம் இருந்து வாங்க தேவை இருக்காது என்றும் நினைக்கின்றேன். ஆனால் பேராசிரியரின் கருத்துகளை புறந்தள்ளவும் இயலாது!

*****************************************

நூலின் பெயர் : நதிகள் இணைப்புத் திட்டம் - “ஆறுகளைப் பிடுங்கி விற்கும் இந்தியா” 

நூலாசிரியர் : முனைவர், பேராசிரியர் த.ஜெயராமன் M.A., M.Phil., P.hd., 

நூல்களை பெற:       புத்தகச்சோலை (பதிப்பகத்தார் மற்றும் விற்பனையாளர்)
பெரியார் மாளிகை, 
44, மகாதானத்தெரு,
மயிலாடுதுறை - பின் கோடு 609 001

போன்: 04364 228634

செல்: 9842007371,9443395550

விலை: ரூபாய் 30/=

நூலாசிரியர் பற்றிய மேலதிக விபரங்களை இத்துடன் இணைத்துள்ள இன்று வெளியான ஜூனியர் விகடன் கட்டுரையை புகைப்படமாக வெளியிட்டுள்ளேன். அதில் பார்க்கவும்!


நன்றி! வணக்கம்!
 


August 30, 2017

நெல்லை ஆரோக்ய எட்வின் அவர்களின் “நீட் தேர்வு” பற்றிய ஒரு பார்வை!

இது எங்கள் நண்பர் திரு. நெல்லை நாங்குநேரி தொகுதி திமுகவின் ஆரோக்ய எட்வின் அவர்கள் “நீட் தேர்வு”பற்றிய ஒரு மினி ஆய்வுக்கட்டுரை. கட்டுரையின் அனைத்து அம்சங்களும் அருமை. இதற்காக அவர் சேர்த்து தொகுத்து எழுதியிருக்கும் பல விஷயங்கள் புதியவைகள். கட்டுரை சம்பந்தமாக அவர் தயாரித்த கிராஃப் படங்கள் புரியும் படியான புதுமைகள். அந்த கட்டுரை அவரது முகநூல் பக்கத்தில் வந்துள்ளது. ஆனால் கருப்பு வெள்ளை எழுத்துகளில் படிப்பதைக்காட்டிலும் சில முக்கிய குறிப்புகளை அடிக்கோடிட்டு காட்டி, வேறு வேறு வண்ணத்தில் தீட்டி, தேவையான இடத்தில் தேவையான புகைப்படங்களை இட்டு அழகாய் காட்டும் பொருட்டு நான் இதை என் வலைத்தளத்தில் பதிகின்றேன். ஒரு வேளை எட்வின் அவர்களுக்கு இந்த கட்டுரையின் வடிவம் பிடித்து இருப்பின் அவரே ஒரு வலைப்பூ ஆரம்பிக்க இந்த முயற்சி ஒரு உந்து சக்தியாக விளங்கும் என நினைக்கின்றேன்.  இனி கட்டுரையை வாசியுங்கள்!

***********************************
தமிழக மருத்துவக்கல்லூரி இடஒதுக்கீடு, பயனடையும் தாழ்த்தப்பட்டவர்கள்! மங்காத மருத்துவ தரம்!

ஆய்வு: நெல்லை எட்வின்

நீட் தேர்வு அநீதி குறித்து தற்போது பரவலாக விவாதிக்கப்படுகிறது. இந்த நிலையில் “நீட்” தேர்வை ஆதரிப்போர், மருத்துவ கல்வியில் இட ஒதுக்கீடு குறித்தும் குறிப்பிடுவதோடு, இந்த இட ஒதுக்கீட்டால் மருத்துவத்துறையின் தரம் குறைவதாகவும் (!) குறைபட்டுக்கொள்கிறார்கள்.


நீட் தேர்வால் சமூக நீதிக்கு ஆபத்தா? இடஒதுக்கீட்டால் மருத்துவத்துறையின் தரம் குறைந்ததா ? மருத்துவர்களின் தரம் குறைந்ததா ? நமது மாநிலத்தின் மருத்துவத்துறை எவ்வாறு உள்ளது என்று கடந்த பல நாட்களாக, பல்வேறு தரவுகளைக் கொண்டு ஆய்வு செய்தேன்.


அதன் சாராம்சம்தான் இந்த சிறு ஆய்வுக்கட்டுரை . இந்த கட்டுரையில் கடந்த ஐந்தாண்டு நடைபெற்ற மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை டேட்டா சேகரிக்கப்பட்டு அலசி ஆராயப்பட்டது. அதன் தாக்கத்தை உண்மை நிலையை வெளிகொண்டுவர முயற்சி செய்திருக்கிறேன்.
உண்மையிலேயே இடஒதுக்கீட்டால் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர்கள் இந்த துறையில் முன்னேறியிருக்கிறார்களா என்பதும் ஆராயப்பட்டுள்ளது.


இந்த டேட்டா அனைத்தும் அரசால் பல்வேறு காலகட்டங்களில் வெளியிடப்பட்ட பல வெப்சைட்களில் தேடி எடுக்கப்பட்டவை. ஒருசில டேட்டாவை நான் இப்போது இருக்கும் நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் என்ன ஆகும் என்று கூர்நோக்கி (projection) பார்த்துள்ளேன்.
இந்த எதிர்கால ப்ரோஜெக்ஷன் என்னுடைய தனிப்பட்ட மற்றும் பல வெப்சைட்களில் நான் படித்ததினால் வந்தது.


மாணவர் சேர்க்கையும் இட ஒதுக்கீடும்:-

தமிழக மாணவர் சேர்க்கையானது நீட் தேர்வு இருந்தாலும் இல்லாவிட்டாலும் இடஒதுக்கீடு (69%) அடிப்படையில்தான்.

அதாவது
Other category (Open Competition) – 31 %, BC – 30 %, MBC – 20 %, SC – 18 % , ST – 1 %
இதற்குள் அருந்ததியருக்கு மற்றும் இஸ்லாமியருக்கு உள் ஒதுக்கீடும் உண்டு ஆனால் இதுதான் பிரதான ஒதுக்கீடு.

இந்த ஆய்வில் நான் தெரிந்துகொண்டது இந்த மருத்துவத்துறையை டாமினேட் செய்வது பிற்படுத்தப்பட்ட வகுப்பினரே (நீங்கள் நினைப்பதுபோல் உயர் சாதியினர் அல்ல).

இடஒதுக்கீடு மட்டுமல்லாமல் ஓபன் காம்பெடிஷன் (Other Category) சீட்டுகளையும் அதிகம் பிடிப்பது பிற்படுத்தப்பட்ட மாணவர்களே.
அதாவது இந்த துறையில், எம்பிபிஎஸ் படிப்பில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் ஏதெனும் ஒருவகையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களே!

அதாவது, 100இல் 95 சீட் பிற்படுத்தப்பட்டவர்களுக்கே.
ஒட்டுமொத்தமாக 95% இருக்கும் பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு 95%தான் கிடைக்கிறது. மீதி 5% இருக்கும் உயர்சாதினர்களில் , 3% சீட்களை பிராமணர்களே பெற்றுக்கொண்டுவிடுகிறார்கள் . இது அவர்களோடு உயர்சாதிப்பிரிவில் போட்டியிடும் சைவ பிள்ளைமார் , கார்காத்தார் பிள்ளைமார் போன்ற வகுப்பினருக்கு மிகவும் கடினமாக இருக்கிறது..

உயர்சாதியினர் போட்டியிடும் ஓபன் காம்பெடிஷனிலும் அவர்களுடன் போட்டியிட்டு அதிக சீட்களை வெல்பவர்களும் பிற்படுத்தப்பட்டவர்களே (BC, MBC etc) கடந்த பத்து வருடங்களாக (இந்த வருடம் நீங்கலாக ..ஏனென்றால் இந்த வருடம் ரேங்க் இல்லை) டாப் 20 ரேங்க் பட்டியலில் 16ல் இலிருந்து 18 இடங்களை பிடிப்பது பிற்படுத்தப்பட்ட மாணவர்கள்தான்.

மேலே சொன்ன அனைத்தும் நான் மிக துல்லியமாக (ஒரு சில குறைகள் இருந்தாலும்) ஆராய்ந்து அழகான கம்ப்யூட்டர் சார்ட்டில் (computer based charts) செய்துள்ளேன்.. கீழே இருக்கும் படத்தை பாருங்கள் உங்களுக்கு புரியும்.
இந்த படம் கடந்த 5 ஆண்டுகளில் எந்த சாதியினர் எத்தனை சீட் பெற்றுள்ளனர் என்பதை காட்டுகிறது இந்த படம் ஒன்றே போதும் எவ்வாறு பிற்படுத்தப்பட்ட மக்கள் இன்று மருத்துவ துறையில் கொடிகட்டி பறக்கிறார்கள் என்று சொல்வதற்கு.

அடுத்து


மேலே இருக்கும் படத்தில் ஓப்பன் கோட்டா (open category where anyone can compete for the seats) என்ற பிரிவில் அதாவது உயர் சாதியினருடன் போட்டியிட்டு தேர்வில் வெற்றிபெற்று அங்கேயும் அதிக இடத்தை பிடிக்கிறது பிற்படுத்தப்பட்டமக்கள்தான் (BC,MBC,SC etc)


ஏன் நீட் தேர்வை நமது கட்சியும், தளபதி அவர்களும் இவ்வளவு எதிர்க்கிறார்கள் என்பதற்கு அடுத்து வரும் புள்ளிவிவரங்கள்தான் காரணம்.
கடந்த 10 வருடங்களாக, உயர்சாதியினர் 2 சதவீதத்திற்கும் குறைவாகவே சேர்கிறார்கள் (இந்த வருடம் நீட் தேர்வினால் இது 8% ஆகியிருக்கிறது)
இங்குதான் பிரச்சினை.

வெறும் 48ஆக இருந்த அவர்கள் எண்ணிக்கை இன்று திடீரென 211ஆக உயர்கிறது.

இப்படி வருடா வருடம் சென்றால் கூடிய விரைவில் உயர்சாதியினரின் எண்ணிக்கை பலமடங்கு கூடி மறுபடியும் பிற்படுத்தப்பட்டவர்கள்பின்னுக்கு செல்லும் நிலை ஏற்படலாம். நாளை இதையே காரணம் காட்டி, இடஒதுக்கீடையும் ஏதாவது செய்தால் பிற்படுத்தப்பட்ட்பிள்ளைகளின் கனவு மட்டுமல்ல ஒட்டுமொத்த சமூக நீதியே சமாதியாகிவிடும்.

அடுத்துமேலே உள்ள இந்த படமானது கடந்த 5 வருடங்களில் இட ஒதுக்கீடு இருந்தால் எவ்வளவு பேர்இல்லையென்றால் எவ்வளவு பேர் ஒவ்வொரு சாதிபிரிவிலும்  மருத்துவர்களாகியிருப்பார்கள் என்பது விளக்கப்படுகிறது.

அதாவது இடஒதுக்கீடு அடிப்படியில் மாணவர் சேர்க்கை இல்லை என்றால் , பிற்படுத்தப்பட்ட (BC) மற்றும் உயர்சாதி (FC) மாணவர்கள் 350இலுருந்து 400 சீட்கள் அதிகம் வாங்குவார்கள் . தலித் (SC) மற்றும் மிகவும் பின்படுத்தப்பட்ட (MBC) மாணவர்கள் கணிசமாக இழப்பார்கள்.

அடுத்துஇந்த படமானது நீட் தேர்வின் அடிப்படியில் நடந்தால் வெறும் 48 சீட்டிலிருந்து உயர்சாதியினர் 2020இல் 400 சீட்கள் பெறுவார்கள்.
அதாவது இதுவரை 2% பெற்றவர்கள் இதனால் 20%இருக்கும் மேலே பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது பிற்படுத்தப்பட்ட் நானூறுபேர் மருத்துவராக முடியாது. பிற்படுத்தப்பட்ட (MBC,BC,SC etc) சமூகத்திற்கு மிகப்பெரிய இழப்பு காத்திருக்கிறது.

அடுத்ததாக


இப்போது இருக்கும் 5 ஆண்டு டேட்டாவை வைத்து (2017ஐ அடித்தளமாக வைத்துகொன்டு/Base year) எதிர்காலத்தை கணித்தால் அதாவது இடஒதுக்கீடு இல்லாமல் இருந்தால் அல்லது இப்போது ரத்து ஆனால் உயர்சாதியினர் பாதிக்குமேல் அதாவது 5% உள்ள அவர்கள் 50% சீட்களை வெல்வதற்கு வாய்ப்பு அதிகம் . 

அதாவது இட ஒதுக்கீடு இல்லையென்றால் இந்தத்துறையும் உயர்சாதியினரின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும்.
இடஒதுக்கீட்டால் நமது மருத்துவத்துறை பாதிப்படைந்ததா?
இல்லை, கடந்த பல வருடங்களாக நமது மாநிலத்தில் இடஒதுக்கீடு மூலம்தான் இந்த துறையில் மாணவ சேர்க்கை நடக்கிறது.
ஆனாலும் இந்தியாவிலேயே தலைசிறந்த மருத்துவத்துக்கு நமது மாநிலம் முன்னோடியாக திகழ்கிறது. இந்தியாவிலேயே மெடிக்கல் டூரிசம் என்று சொல்லப்படும் மருத்துவத்திற்காக வெளிநாட்டிலும் மற்ற மாநிலத்திலும் அதிகம் விரும்பும் நகராக நமது சென்னை விளங்குகிறது.
நாட்டிலேயே தலைசிறந்த மருத்துவ காலோரிகள் இங்குதான் உள்ளது . தலைசிறந்த மருத்துவர்கள் இங்குதான் உள்ளார்கள்.
எந்த ஒரு நோயை எடுத்துக்கொண்டாலும் அதற்கு மூன்று அடுக்கு வைத்தியம் அல்லது கவனிப்பு தேவை (three levels of “care”)


1. முதல் அடுக்கு -Primary Care – to Prevent the Disease – நோய் வராமல் தடுக்க. அல்லது ஆரம்ப நிலையில் வைத்தியம் பார்க்க


2. இரண்டாவது அடுக்கு -Secondary Care – To Treat Disease – வைத்தியம் பார்க்க


3. மூன்றாவது அடுக்கு -Tertiary Care – To Treat Complications – நோயினால் ஏற்படும் சிக்கல்களை தீர்க்க


இதில் முதல் அடுக்கு கவனிப்பை ஆரம்ப சுகாதார நிலையங்களும் (அந்த இயக்குனரகத்தில் பெயரில் ஆரம்ப சுகாதாரம் , தடுப்பு மருத்துவம் இருப்பதை கவனியுங்கள்) இரண்டாம் அடுக்கு கவனிப்பை அரசு மருத்துவமனைகளும், மூன்றாம் அடுக்கு கவனிப்பை மருத்துவக்கல்லூரிகளும் அளித்து வருகின்றன
.
உதாரணமாக

• சுகப்பிரசவம் என்றால் ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே பார்க்கலாம்

• அறுவை சிகிச்சை என்றால் அரசு மருத்துவமனைகளில் பார்ப்பார்கள்

• சிறிது சிக்கல் (உயர் இரத்த அழுத்தம், வெட்டு, மஞ்சள்காமாலை, இரட்டை குழந்தைகள், இரத்த போக்கு) என்றால் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் பார்க்கலாம்.

இந்த மூன்றடுக்குமே அரசாங்கத்தால் மிக சிறப்பாக பல வருடங்களாக செயல்படுத்தப்பட்டு வருவதும் நம் மாநிலத்திலேதான்.

வட மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கும்போது நாம் எவ்வளவு மேம்பட்டு இருக்கிறோம் என்பது கீழ்வரும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றது. .


மருத்துவர்களின் எண்ணிக்கை (ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு) தமிழ் நாடு - 149 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 87 ; மபி - 41 ; உபி - 31; ராஜஸ்தான் - 48 ; சத்தீஸ்கர் - 23 ; இந்திய சராசரி : 36


Infant Mortality Rate (IMR சிசு மரண விகிதம் 1000 பிறப்புக்கு) :- 
தமிழ் நாடு - 21 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 36 ; மபி - 54 ; உபி - 50 ; ராஜஸ்தான் -47 ; சத்தீஸ்கர் - 46 ; இந்திய சராசரி : 40


Maternal Mortality Rate (MMR - ஒரு லட்சம் பிரசவத்தில் தாய் இறக்கும் விகிதம்) தமிழ் நாடு - 79 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 112 ; மபி - 221 ; உபி - 285 ; ராஜஸ்தான் - 244 ; சத்தீஸ்கர் - 221 ; இந்திய சராசரி : 167


தடுப்பூசி அளிக்கப்படும் குழந்தைகள் சதவீதம் (vaccination coverage) :- தமிழ் நாடு - 86.7% ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 55.2% ; மபி - 48.9% ; உபி - 29.9% ; ராஜஸ்தான் - 31.9% ; சத்தீஸ்கர் - 54% ; இந்திய சராசரி : 51.2%


கல்வி விகிதாசாரம் (Literacy Rate) :- தமிழ் நாடு - 80.33% ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 79% ; மபி - 70% ; உபி - 69% ; ராஜஸ்தான் - 67% ; சத்தீஸ்கர் - 71% ; இந்திய சராசரி : 74%


ஆண் - பெண் விகிதாசாரம் (ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு) இது குறைவாக இருந்தால், பெண் சிசு கொலை அதிகம் என்று பொருள்):- ----------------------------------------------------------- தமிழ் நாடு - 943 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 890 ; மபி - 918 ; உபி - 902 ; ராஜஸ்தான் - 888 ; இந்திய சராசரி : 919


மனித வள குறியீடு (Human Development Index)
தமிழ் நாடு - 0.6663 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 0.6164 ; மபி - 0.5567 ; உபி - 0.5415 ;ராஜஸ்தான் - 0.5768 ; சத்தீஸ்கர் - 0.358 ; இந்திய சராசரி : 0.6087


ஏழ்மை சதவீதம் (Poverty % of people below poverty line) தமிழ் நாடு - 11.28% ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 16.63% ; மபி - 31.65% ; உபி - 29.43% ; ராஜஸ்தான் - 14.71% ; சத்தீஸ்கர் - 39.93% ; இந்திய சராசரி : 21.92%


ஊட்டசத்து குறைபாடு குழந்தைகள் (Malnutrition) தமிழ் நாடு - 18% ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 33.5% ; மபி - 40% ; உபி - 45% ; ராஜஸ்தான் - 32% ; சத்தீஸ்கர் - 35% ; இந்திய சராசரி : 28%


நண்பர்களே… இட ஒதுக்கீட்டால் மருத்துவத்துறையில் பாதிப்பு ஏற்படுகிறதா? இந்த இட ஒதுக்கீட்டால் பயன்பெறுபவர் எவர்? நீட் தேர்வால் பாதிக்கப்பு யாருக்கு என்ற கேள்விகளுக்கெல்லாம் தற்போது விடை கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்.

நீட் தேர்வை நாம் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டிய அவசியத்தையும் இந்த ஆய்வு தெளிவாக்கியிருக்கும் என்றும் நம்புகிறேன்.
இதில் ஏதேனும் சந்தேகம் தங்களுக்கு இருந்தால் கேட்கலாம்.

******************************

கட்டுரையாளர்: நெல்லை நாங்குநேரி ஆரோக்ய எட்வின்


திரு. எட்வின் அவர்களின் இந்தப்பதிவின் முகநூல் சுட்டி

 https://www.facebook.com/permalink.php?story_fbid=750200835152798&id=747725028733712

July 9, 2016

மீண்டும் நான் அபிஅப்பா இங்கே!

அப்போதெல்லாம் பள்ளிக்கு சேர்க்கும் போது அந்த குழந்தைக்கு 2 ரூபாய்க்கு ஒரு மாலை எல்லாம் வாங்கி போட்டு கன்னத்தில் சந்தனம் எல்லாம் தடவி கையிலே ஒத்த பைசா சாக்லெட் கொடுத்து அந்த சாக்லெட் வாயில் பாதியும் கையில் மீதியுமாக வாயில் எச்சில் ஒழுகவும், கண்ணில் கண்ணீர் ஒழுகவும் வந்து தான் காதை சுத்தி மூக்கை தொட வேண்டும். அப்படிப்பட்ட ஒரு சுபயோக சுபதினத்தில் நான் என் ஒன்றாம் வகுப்பு லெஷ்மி டீச்சர் வகுப்பில் அழுது கொண்டே அமரும் போது பக்கத்தில் இருந்தவன் பெயர் பாலாஜி. அவன் அப்பா பெயர் செல்வராஜ் பி.ஏ.பி.எல். பள்ளிக்கு எதிர்வீட்டுக்கு 8 வீடு தள்ளி தான் அவன் வீடு. ஆச்சுதா... எனக்கு என் வலது பக்கத்தில் அமர்ந்து இருந்த ராதாவை பிடித்த அளவுக்கு பாலாஜியை பிடிக்கவில்லை. அவன் ஒரு உம்மணாம் மூஞ்சியாக இருந்தான்.

ஏனனில் ராதா என்னுடன் இந்த தேசிய ஆரம்பப்பள்ளி வரும் முன்னரே ஆரியபாலா, அவ்வையார் ஸ்கூல், புதுத்தெரு என பல பள்ளிகளில் பள்ளி தோழனாக (4ம் வயதில் நான்கு பள்ளிகள் நாங்கள் கொட்டம் அடித்து விரட்டப்பட்டும், தானாக வெளியேறியதும் முன்பே எழுதி இருக்கின்றேன்) இருந்தமையால் ராதாவிடமான என் நட்பு பிடித்து இருந்தது. ஆனால் பாலாஜியை என்னால் ஒத்துக் கொள்ளவே முடியவில்லை.

ஆனால் என் துரதிஷ்டம் என் அடுத்த அடுத்த வகுப்பிலும் இதே பாலாஜி தான் என் வகுப்பு தோழன். தோழன் என சொல்வது அவ்வளவு சரியாக இருக்காது. வகுப்பு எதிரி. எதிரி என்றால் நாங்கள் அடித்து கொள்வோம் என்றெல்லாம் இல்லை. பேசிக்கவே மாட்டோம். ஆனால் செட்டித்தெரு சிவசங்கரன் மாத்திரம் இவனிடம் பேசுவான். (அவன் இப்போது மகாதானத்தெரு அம்பாபாய் திருமண மண்டபம் பக்கத்தில் கடை வைத்து இருக்கான்)

அவனை நான் முறைப்பதும் அவன் என்னை முறைப்பதுமாக பல ஆண்டுகள் ஓடின. அந்த பள்ளியில் இருந்து அடுத்த பள்ளியான உயர்நிலை பள்ளிக்கு வந்த பின்னரும் கூட எங்கள் இருவருக்கும் ஒரே வகுப்பு தான் அமைந்தது. அப்பவும் பேசுவது இல்லை. ஒரு சில நாட்கள் “வீட்டு பாட நோட்டு வேண்டும்” என ஒரு துண்டு சீட்டில் எழுதி அவன் எனக்கு தள்ளி விடுவதும் பதிலுக்கு நான் “தரேன்.. ஆனா மரியாதையா அதிலே நடுப்பக்கம் பேப்பர் கிழிக்காமல் தரவும்” என ‘நோட்’ எழுதி அதை தள்ளி விடுவதும் தான் தொடர்ந்ததே தவிர வாய் வார்த்தைகள் எதும் இல்லை.

சரின்னு அப்படியே வாழ்க்கை போனது.. ஆனால் வகுப்பு பிரிக்கும் போது கூட எங்கள் இருவருக்கும் மட்டும் மாறாது... ஒரு கட்டத்தில் 9ம் வகுப்பு முதள் நாள் நான் வந்து அந்த “எதிரி”க்கு சீட் போட்டு விட்டு காத்திருந்தேன். லேட்டாக வந்த அவன் ஓடி வந்து என்பக்கத்தில் அமர்ந்ததும், அது போல பத்தாம் வகுப்பில் என்.வி சார் வகுப்பில் அவன் எனக்கு இடம் போட்டு வைத்ததும் கூட நடந்தது... பத்தாம் வகுப்பு முடிந்தது.... சரி இனி சனி விட்டது... நான் பாலிடெக்னிக் போய்விடுவேன் என நினைத்து இருந்த போது தான் அந்த விபத்து நடந்தது.... ஆமாம் இருவருக்கும் பாலிடெக்னிக் கிடைக்கவில்லை....
மீண்டும் 11 வது ஏ பிரிவில் இருவருக்கும் அடுத்த அடுத்த இடம். அது எங்கள் பள்ளியில் 3ம் நம்பர் வகுப்பு. அதே போல அதற்கு மேலாக இருப்பது 12 வது ஏ. ஆக அந்த இரண்டு வருடம் கூட அப்படித்தான் கழிந்தது. அப்போதும் பேசிக்கொள்வது கிடையாது. ஒரு வழியாக 12ம் வகுப்பு முடிந்தது....

அடுத்து காலேஜ் சேர வேண்டும்....

முதல் நாள் அட்மிஷன்... நல்ல மார்க் வாங்கினவனுக்கு எல்லாம் இன்னும் லிஸ்ட் வராத நிலையில் எனக்கு வந்து விட்டது. ஈ.எஸ்.கணபதி பிள்ளை அவர்கள் சிபாரிசால் எனக்கு முதல் லிஸ்ட் பெயர். அதை போய் கல்லூரியில் பார்க்கும் போது அட ராமா... அவன் பெயர் எனக்கு முன்னாடி நிக்குது. அவன் ராதாபிள்ளை சிபாரிசால் உள்ளே வந்து விட்டான். சரின்னு காலேஜ் அட்மிஷன் போகும் போது என் அப்பா என்னை அழைத்து போக, அவன் அவன் அப்பாவுடன் அதாவது செல்வராஜ் அப்பாவுடன் வந்தான். நால்வரும் நேருக்கு நேராக பார்த்துக் கொண்டோம்.

அப்பா தன் முகத்தை திருப்பிக் கொள்ள, அவன் அப்பாவும் முகத்தை திருப்பிக் கொண்டார். அட்மிஷன் முடிந்து வெளியே வந்தோம்...

என் அப்பா என்னிடம் “டேய் அந்த செல்வராஜ் ரொம்ப திமிர் காரண்டா... ஒன்னாவது முதல் சிஸ்த்பாரம் வரை ஒன்னாதான் படிச்சோம். என் பக்கத்தில் தான் அவன் சீட்டு. பி ஆர் தான் வாத்தியார். நாங்க பேசிக்கிட்டதே இல்லை. ரொம்ப திமிர்காரன்” என சொன்னாங்க....

அந்த மூன்று வருடங்களும் நாங்க பக்கத்து பக்கத்துல தான். ஆனாலும் பேச்சு வார்த்தை கிடையாது.

அப்பாடான்னு பி எஸ் சி முடிந்த பின்னர் கூட நாங்கள் கடைத்தெரு, பள்ளி என எங்கு பார்ப்பினும் பேசுவது கிடையாது... ஒழிஞ்சாண்டா என நினைத்துக் கொள்வேன்...

பின்னர் 1992ல் நான் முதன் முதலாம அபுதாபி போன போது சிரியன் ஏர்வேஸ்ல மும்பையில் (அப்போ பம்பாய்) இருந்து போகும் போது கூட பக்கத்து சீட்டில் இவன் வந்துடுவானோ என நினைத்து பயந்தேன்... நல்ல வேளை ... இல்லை...

பின்னர் 1994ல் தான் அவனை பார்த்தேன்... என் வீடு அப்போது மாயூரநாதர் வடக்கு வீதி. அவன் வீடு மகாதானத்தெரு... கூப்பிடு தூரம்...
வீட்டுக்கு வந்தான். நான் அப்போது லீவில் வந்திருந்தேன்... வாசலில் நின்று ஹார்ன் அடித்தான். மனசு திக் திக் என ஆனது. பேசிடுவானோ என பயந்தேன்... பேசவில்லை... ஒரு பத்திரிக்கை கொடுத்தான். விர்ரென போயிட்டான்...

அவனுக்கு கல்யாணமாம்.... எனக்கு அப்போது தான் பெண் பார்க்கும் படலம்....
நானும் கல்யாணத்துக்கு போனேன்... அமைதியாக போய் மேடையில் நின்ற அவன் முகம் கூட பார்க்காமல் அன்பளிப்பை அவன் மனைவி கையில் கொடுத்தேன். வந்து விட்டேன். சாப்பிடவில்லை...

அதன் பின்னர் நான் அந்த ஒரு மாத லீவில் ஒரு நாள் அவன் வீட்டு வாசலில் என் வண்டியில் (அப்பாவின் கைனடிக் ஹோண்டா) ஒரு ஆடு குறுக்கே வந்ததால் சறுக்கி விழுந்தேன். எழுந்தேன்... வாசலில் இருந்தவன் வந்தான். பின்னர் உள்ளே போய் விட்டான். அவன் வீட்டு வாசலில் அமர்ந்தேன். டங் என ஒரு லோட்டா தண்ணீர் கொண்டு வந்து வைத்தான். ஒரு காசித் துண்டை எடுத்து என் மீது போட்டான். காயத்தை துடைத்துக் கொள்ள வேண்டுமாமாம். உள்ளே போய் விட்டான்.

நானும் மீண்டும் 1995ல் வந்தேன். என் திருமணம்... அவனுக்கு சென்று பத்திரிக்கை கொடுக்க போனேன். அவன் இல்லை. கதவிடுக்கில் அழைப்பிதழை தள்ளி விட்டு வந்து விட்டேன். அவனுக்கு நண்பனாக இருக்கும் சிவசங்கரை கேட்டேன்... “டேய் அவனுக்கு பேச்சு வருமா? வராதா?” என்றேன்.... சிவசங்கர் சொன்னார் “இதையேத்தான் அவனும் கேட்டான்” ...

என் திருமணத்துக்கு வந்தான். மேடையில் என்னை பார்த்தும் பார்க்காத மாதிரி அன்பளிப்பை என் மனைவி கையில் கொடுத்தான் போய்விட்டான்....

அடுத்து சில நாட்களில் ஒரு பேய் மழை... எங்கோ போய் விட்டு வண்டியில் வந்து கொண்டு இருந்தான். என் வீடு வந்ததும் நிப்பாட்டினான்... நான் கேட்டை திறந்து விட்டேன். கொட்டும் மழையில்நனைந்து இருந்தான். நான் உள்ளே போய் ஒரு துண்டை எடுத்து வந்து அவன் மீது போட்டேன். பின்னர் உள்ளே போய்விட்டேன்.

இதல்லாம் 1995.....

இன்று 09.07.2016... மாலை நான் வண்டியில் வந்து கொண்டு இருந்தேன்.... அவனும் நானும் அதே எங்கள் பள்ளிக்கு எதிரே சந்தித்துக்கொண்டோம்....
நான் வண்டியை நிப்பாட்டி விட்டேன். அவனும் எதிர்புரம் வண்டியை நிறுத்தி விட்டான்.
சற்று நேரம் இருவரும் பார்த்துக் கொண்டோம்... பின்னர் அவன் போய்விட்டான். நானும் வந்து விட்டேன். வீட்டுக்கு வந்து என் மனைவியிடம் எல்லாம் சொன்னேன்.
“அடடே பாலாஜி பொண்ணு கூட நம்ம அபி கூடத்தான் படிக்கிறா... சேர்க்கும் போது அவரும் அவர் மனைவியும் தான் வந்தாங்க. ஆனா பேசலை நாங்க. பின்ன மயிலாடுதுறை என்றதும் தான் அவங்க மனைவி பேசினாங்க. அனேகமாக அபி க்ளாஸ் தான் இருக்கனும். ஆனா தெரியலை” என சொன்னாங்க....
ஆக மூன்றாம் தலைமுறையாக அந்த நடக்காத சண்டை நடந்து கொண்டு இருக்க வேண்டும்....
..............

நிற்க.... ஒரு வேளை பாலாஜியும் இது போல முகநூல் பதிவுகள் எழுதுபவனாக இருந்தால் இதே பதிவை எழுதி இருக்கலாம். யார் கண்டது? ஆகவே பாலாஜி என தேடிப்பார்த்து உங்கள் நேரத்தை செலவடிப்பதை விட இதே பதிவில் என் பெயர் வரும் இடத்தில் அவன் பெயரையும் அவன் பெயர் இடத்தில் என் பெயரையும் போட்டு படித்து பார்த்து புலகாங்கிதம் அடையும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்!

December 29, 2014

மெடிகல்சீட் வாங்கலியோ மெடிகல் சீட்!!!இந்த டெலிமார்கெடிங் ஆசாமிகளுக்கு எப்படித்தான் டேட்டாஸ் கிடைக்கிறதோ தெரியவில்லை. சமீபமாக ஒரு கம்பனியில் இருந்து போன்.


"சார் நீங்க தான் அபிராமி அப்பாவா?"

"ஆமாம்"

"உங்க பொண்ணை மெடிகல் சேர்கனுமா?"

"ஆமாங்க ஆமாம்"

"ரொம்ப சிம்பிள். அப்ராட்ல படிக்க வையுங்க. ஜஸ்ட் 25 லட்சம் தான். பிலிப்பைன்ஸ்ல... போக்குவரத்து செலவு, கட்டுசோறு செலவு உட்பட மெடிகல் முடிஞ்சு அதிலே பி ஜியும் முடிச்சு அதன் பின்னே இங்க இந்தியாவிலே ஒரு டெஸ்ட் இருக்கு, அதையும் பாஸ் பண்ண வச்சு உங்க கிட்ட டாக்டரா ஒப்படைக்கும் வரை  ஜஸ்ட் 25 லட்சம் தான்"

"ஜஸ்ட்(!?) 25 லட்சம் தானா, இருக்கட்டும்க, அவ மார்க் என்னான்னு பார்த்துகிட்டு பின்ன பேசுவோம்"

"சார் இப்ப அட்மிஷன் நடக்குது வெறும் ஒன்னரை லட்சம் கட்டி சீட் வாங்கிடுங்க. மத்ததை பின்ன பார்த்துப்போம். பாஸ்போர்ட் கூட நாங்க அப்ளை பண்ணி வாங்கி, விசா ப்ராசஸ் பண்ண ஆரம்பிச்சிடுவோம்"

"பிசாத்து காசு ஒன்னரை லட்சம் தானே. குடுத்தா போச்சு. (அவ்வ்வ்வ்) பின்ன பேசிப்போம்"

ஒரு வழியா போனை கட் பண்ணும் வரை போதும் போதும் என்றாகிவிடும். பேசுவது ஆண்களா இருந்தா கூட கொஞ்சம் கடுமையா சொல்லி வைக்கலாம். எல்லாம் பொம்பள பசங்க. கடுமையா பேசி நோகடிக்க மனசும் வரலை. பாவம் அவங்க பொழப்பு அது.

இப்படியாக நாலொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் போன் கூட அல்லாடிக்கொண்டு இருந்தேன்.

இப்படித்தான் இரண்டு நாள் முன்பாக இரவு வெகுநேரம் கழித்து வந்தேன் வெளியூரில் இருந்து. காலையில் அசந்து தூங்கி கொண்டு இருந்த போது போன் வந்தது. எடுக்கலாம் என நினைக்கும் போது அசதியில் முடியவில்லை.  என் மகன் நட்ராஜ் தான் எடுத்தான். தூக்க கலக்கத்தில் அந்த சம்பாஷனைகளை மட்டும் கேட்டுக்கொண்டு இருந்தேன்.

"ஹலோ சார், எப்படி இருக்கீங்க?"

"நான் நல்லா இருக்கேன்" - நட்ராஜ்

(நட்ராஜ்க்கு எப்போதும் போனை ஸ்பீக்கர்ல போட்டு பேசுவது தான் வழக்கம். காது வலிக்கும் என டேபிள் மேலே வச்சுட்டு நடந்து நடந்து எல்லாம் பேசுவான்)

"யாரு தம்பி இது. வீட்டிலே அப்பா இல்லியா? அப்பா கிட்டே கொடுங்க நல்ல பிள்ளை தானே நீங்க?"

"நான் நல்ல பிள்ளை தான். அப்பா தூங்குறாங்க. எழுப்பினா கத்துவாங்க"

"சரி அம்மா கிட்ட கொடுங்க"

"அம்மா கோவிலுக்கு போயாச்சு. அக்கா ட்யூஷனுக்கு போயாச்சு. இன்னிக்கு ஃபுல் டெஸ்ட் இருக்கு பிசிக்ஸ்ல"

"சரி வீட்டிலே பெரியவங்க இருந்தா கொடுங்க"

"நானே பெரியவங்க தான். என் பிரண்ட் கோகுலோட தம்பி நகுல் எல் கே ஜி தான் படிக்கிறான். அவனே என்னை "அண்ணா"ன்னு தான் சொல்லுவான். அதனால நானே பெரியவங்க தான். அதனால என் கிட்ட சொல்லுங்க"

"அது வந்துப்பா... அபிராமிக்கு மெடிகல் சீட் பிலிப்பைன்ஸ்ல படிக்கிறது விஷயமா பேசனும்"

"பிலிப்பைன்ஸ் எங்க இருக்கு?"

"தூரமா இருக்கு. அப்பாவை எழுப்புங்க"

"மேக்னா  மெட்ரிகுலேஷன் ஸ்கூலை விட தூரமா?"

"என்னது? ...இது ரொம்ப தூரம், பிளைட்ல போகனும், அப்பாவை எழுப்புங்க"

"ஆட்டோவுல தான் நான் போவேன். அதுக்கு மாசம் 600 ரூப்பீஸ். பிளைட்ல தினம் போகனும்னா எவ்ளோவ் பீஸ்"

"தம்பி நல்ல பிள்ளை தானே நீங்க. அப்பாவை எழுப்புங்க"

"நான் பிலிப்பைன்ஸ்ல படிக்க எவ்ளோவ் ஆகும்"

கொஞ்சம் சலிப்புடன் "25 லட்சம் ஆகும்"

"நான் ஃபோர்த் ஸ்டேண்டர்ட் போனதும் நானும் பிலிப்பைன்ஸ்ல வந்து படிக்கட்டா"

"தம்பி வீட்டிலே பெரியவங்க வேற யாரும் இருந்தா கொடுங்க"

"நானே பெரியவங்க தான். வேணுமின்னா நகுல் கிட்டே கேளுங்க. அவன் அம்மா நம்பர் தரவா"

"தம்பி நீங்க +2 முடிச்சதும் இங்க வந்து படிக்கலாம். இப்ப அப்பாவை எழுப்புங்க"

"அதான் சொன்னனே அப்பாவை எழுப்பினா கத்துவாங்க. 25 லட்சம்னா ட்வண்டி ஃபைவ் போட்டு எத்தினி சைபர்"

அவங்க மனசுகுள்ள கணக்கு போட்டு பார்த்திருப்பாங்க போலிருக்கு..... கொஞ்சம் இடைவெளி விட்டு "அது நிறைய சைபர் இருக்கு"

"அய்யோ, மேக்னா ஸ்கூல்ல 14 போட்டு மூணு சைபர் தான். அம்மா அதுக்கே கத்துறாங்க. நெறய சைபர்க்கு  நெறய கத்துவாங்க"

"அது வேற ...இது வேறப்பா. அப்பாவை எழுப்பு"

"ப்ளைட் பெருசா இருக்குமா? கோகுல், வித்யா எல்லாம் என் ஆட்டோவிலே வருவாங்க, அவங்களும் அங்க சேர்ந்தா எல்லாரும் பிளைட்ல போலாம்ல"

"ஆமாம், அம்மா வந்தாச்சா கோவில்ல இருந்து"

"இன்னும் வரலை. வந்தாலும் தரமாட்டேன். எனக்கு சொல்லுங்க பிளைட் பெரிசா இருக்குமா?"

"ம் இருக்கும்" ரொம்ப டயர்டா ஆகிட்டாங்க போலிருக்கு.

"நீங்களும் பிலிப்பைன்ஸ்ல தான் படிச்சீங்கலா"

"இல்ல. அங்க படிச்சா நான் ஏன் டெலிமார்கெடிங்ல இருக்கேன்"

"டெலிமார்கெடிங்னா என்னா?"

போன் டக்கென வைக்கப்பட்டது.

சரியான "மூடர் கூடத்தில்" வந்து மாட்டிகிட்டோம்னு நினைச்சிருப்பாங்க அந்த பெண்.

அதன் பின்னர் இதுவரை அவங்க கிட்ட இருந்து போன் வரலை. அவங்க பட்ட கஷ்டம் அவங்களுக்கு தானே தெரியும்!